பதிவு செய்த நாள்
05
ஜூலை
2011
12:07
திருவனந்தபுரம்:கேரளாவில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில், இன்னும் ஒரே ஒரு ரகசிய அறை மட்டும் திறக்கப்பட வேண்டியுள்ளது. இந்த அறையை நேற்று திறப்பதாக இருந்தது. ஆனால், திடீரென ஒத்திவைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டி வரும் 8ம் தேதி கூடி ஆலோசித்த பின், கடைசி அறை திறப்பது குறித்து முடிவாகும். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படும் பொக்கிஷங்கள் குறித்து, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட கமிட்டி ஆய்வும், கணக்கெடுப்பும் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக ஐந்து அறைகளை பரிசோதித்த கமிட்டி, நேற்று கடைசி அறையாக உள்ள ஆறாவது அறையை (பி அறை) திறப்பது குறித்து விவாதித்தது.இந்த ஆலோசனையில், அறையை திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாறாக அறையை திறப்பதை ஒத்தி வைத்தனர். வரும் 8ம் தேதி, சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டி மீண்டும் கூடி ஆலோசித்த பின்னரே, "பி அறை என அழைக்கப்படும் கடைசி ரகசிய அறை திறக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டி கோவிலில் ஏற்கனவே திறக்கப்பட்ட "இ அறையை (இங்கு தான் மூலவருக்கு தினமும் பூஜை செய்ய பயன்படும் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன) நேற்று காலை திறந்து மீண்டும் கணக்கெடுக்கும் பணியை நடத்தியது.இதற்கிடையில், கோவிலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேரள போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., வேணுகோபால் கே.நாயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "பத்மநாப சுவாமி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக உள்ளது என்றார்.
கோவில் சொத்து கோவிலுக்கு தான்: "பத்மநாப சுவாமி கோவில் சொத்துக்கள் அனைத்தும், கோவிலுக்கு தான். கோவிலுக்கு போதுமான பாதுகாப்பை கேரள அரசு வழங்கும் என, முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார். பத்மநாப சுவாமி கோவில் உள்ள ஆறு ரகசிய அறைகளில், இதுவரை ஐந்து அறைகளை திறந்து ஆய்வு செய்ததில், 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி, மரகத, வைடூரிய நகைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து, முழுமையான அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்நிலையில், பத்மநாப சுவாமி கோவிலுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்த உயரதிகாரிகள் கூட்டம், முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில், திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு பின், முதல்வர் உம்மன் சாண்டி கூறியதாவது:பத்மநாப சுவாமி கோவிலில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அங்கிருந்து கிடைக்கும் சொத்துக்கள் அனைத்தும், கோவிலுக்கு தான் சொந்தம். கோவிலுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். இருப்பினும், சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தால், கேரளாவுக்கு பெருமை சேர்க்கும் பத்மநாப சுவாமி கோவிலின் சொத்துக்களுக்கு, அரசு செலவில் நிரந்தர பாதுகாப்பும் அளிக்கப்படும்.கோவிலில் நடந்து வரும் கணக்கெடுப்பு குறித்து, தினமும் செய்திகள் வெளிவருகின்றன. கோவிலில் பாதுகாக்கப்படும் சொத்துக்கள் அனைத்தும், பத்மநாப சுவாமிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டவை. அவை அனைத்தும், கோவிலுக்கே சொந்தம். அச்சொத்துக்களுக்கு அமைக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கை, பக்தர்களுக்கோ, கோவிலின் அன்றாட பணிகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் செயல்படுத்தப்படும். அதற்கு உண்டாகும் செலவை, மாநில அரசு ஏற்கும்.கோவில் அருகிலேயே, 24 மணி நேரமும் செயல்படும், போலீஸ் கட்டுப்பாட்டறை அமைத்து, அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி பாதுகாப்பு அளிக்கவே, அரசு திட்டமிட்டு வருகிறது.இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.
பொக்கிஷங்களின் கணக்கைக் காட்டும் பழைய ஆவணம்:* திருவனந்தபுரத்தின் பத்மநாப சுவாமி கோவிலில், விலை மதிப்பிட முடியாத பொருட்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல.
* இந்தப் பொருட்களின் பட்டியலை, "மதிலகம் ரேகைகள் என்ற பழைய ஆவணமும் தெரிவித்துள்ளது.
* கோவிலின் நிர்வாகிகள் எழுதி வைத்த ஆவணங்கள் தான், "மதிலகம் ரேகைகள்!
* 500 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், "மதிலகம் ரேகைகள் பதிவு செய்துள்ளது. இது, கிட்டத்தட்ட ஸ்ரீரங்கம் கோவிலின், "கோவில் நடைமுறை போன்றது எனலாம்.
* பத்மநாப சுவாமிக்கு சார்த்தப்படும், சரப்பளி, பவளம், நீலமணிக் கற்கள் பதிக்கப்பட்ட பொன்னாலி பட்டத்தாலி போன்ற பல்வேறு ஆபரணங்கள், எத்தனை எத்தனை உள்ளன என மதிலகத்தில் துல்லியப் பட்டியல் உள்ளது.
* இது தவிர, அறைகளில் உள்ள சிலைகள், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகளின் எண்ணிக்கையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இருந்தபோதும், தற்போது சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டி நடத்தும் கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பின்னரே, கமிட்டி ஆவணங்கள் தயாரித்த பின்னரே, கோவில் பொக்கிஷத்தின் முழு விவரம் தெரியவரும்.