பதிவு செய்த நாள்
21
மே
2015
11:05
ஆத்தூர் : ஆத்தூர் திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று, அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. கோவிலில் வடிவமைக்கப்பட்ட சிலைகளை பார்த்து, அப்பகுதி மக்கள் பிரமித்தனர். ஆத்தூர், தாயுமானவர் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, தேர்த்திருவிழா மற்றும் தீமிதி விழா நடந்து வருகிறது. கடந்த, மே, 3ம் தேதி, காப்பு கட்டுதலுடன், தேர்த்திருவிழா துவங்கி, தினமும் பல்வேறு சிறப்பு பூஜை நடக்கிறது.இந்நிலையில், நேற்று முன்தினம், பால் குடம் ஊர்வலம், அன்றிரவு இரவு, 9 மணியளவில், திரவுபதி அம்மன் திருக்கல்யாண ஊர்வலம் நடந்தது. நேற்று, காலை, 9 மணியளவில், அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அப்போது, திருமணக் கோலத்தில் அருள்பாலித்த திரவுபதி அம்மனுக்கு, பக்தர்கள், தங்க தாலிகளை வழங்கினர்.மேலும், திரவுபதி அம்மன், அர்ஜூனனுக்கு, 100 முதல், 1,000 ரூபாய் வரை, ஏராளமான பக்தர்கள் "மொய் பணம் எழுதினர். அப்போது, மூலவர் திரவுபதி அம்மன், சர்வ சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில், ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
வரும், 22ம் தேதி, தீமிதி திருவிழா நடக்கிறது. 23ம் தேதி, காலை, 10 மணியளவில், தர்மர் பட்டாபிஷேகம் முடிந்த பின், மாலை, 3 மணியளவில், திரவுபதி அம்மன் திருத்தேர் விழா நடக்கிறது. 26ம் தேதி, போர் மன்னன் பூஜையுடன், விழா முடிவடைகிறது. தினமும் நடக்கும் பூஜையில், திரவுபதி அம்மன் பல்வேறு அலங்காரத்தில், அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரத்தில், பல்வேறு சிற்பக் கலைகளுடன், மகாபாரதக்கதை குறித்த சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திரவுபதி அம்மன், அக்னி யாக சாலையில் இருந்து பிறப்பது, தர்மராஜர் பட்டாபிஷேகம், அர்ஜூனனுடன் திரவுபதி திருக்கல்யாணம்,துரியோதனன், துச்சாதனன் ஆகியோர், திரவுபதி அம்மனை துகில் உரியும்போது, கண்ணன் துகில் தரும் காட்சிகள் ஆகியன தத்ரூபமாக இடம் பெற்றது, இன்றைய இளைய சமுதாயத்தினரையும் பிரமிக்க வைக்கக் கூடியதாக இருந்தது.