முதியவர் ஒருவர் நடக்க இயலாத நிலையில் படுக்கையில் இருந்தார். ஆனாலும், முகத்தில் மட்டும் ஒரு பளிச். அவரைப் பார்க்க வந்த ஒருவர், ஐயா! உங்களுக்கு எத்தனை வயதாகிறது? என்றார்.அவர் சிரித்த முகத்துடன், நான் எண்பது என்னும் இனிய பகுதியில் இருக்கிறேன், என்றார்.எண்பது என்பது உங்களுக்கு இனிமையாகத் தெரிகிறதா! நோய்வாய்பட்டுள்ளீர்கள். நடக்க முடியாமல் தவிக்கிறீர்கள். இதை எப்படி இனிமை என்கிறீர்கள்.முதியவர் இப்போது வாய்விட்டு சிரித்தார்.வயதாக ஆக என் கால்கள் தள்ளாடுவது உண்மையே. கண்கள் மங்கிவிட்டன. பலமும் குறைந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும், நான் இனிமையான பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். என்னை உள்ளன்போடு நேசிக்கிற என்னுடைய அருமை ஆத்துமநேசராகிய ஆண்டவரை காணும் நாளும் நெருங்குவதை எண்ணி நான் ஆனந்தமாய் உள்ளேன். அவரை மட்டுமல்ல! பரலோக தேவதுõதர்களையும், பரிசுத்தவான்களையும் நான் சந்திக்க இருக்கிறேன். இந்த நினைவு என் எண்பதாம் வயதை இனிமையாக்குகிறது, என்றார்.எத்தனை வயதானாலும் என்றும் பதினாறு வயதாக மனதை வைத்துக் கொண்டால் எந்தக் கவலையும் இல்லை. ஆதி திருச்சபை தந்தையரில் ஒருவராகக் கருதப்படும் போலிகார்ப், தன் 86 வயதிலும் உற்சாகமாக இருந்தார். அவரை ரோம அரசாங்கம் கைது செய்து, கிறிஸ்துவை மறுதலிக்கும்படியும் (வணங்கக்கூடாது), மீறினால் தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டது. அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை. தண்டனை வழங்கப்படும் இடத்துக்கு உற்சாகமாக நடந்து சென்றார்.அவர் கூறும் போது, இத்தனை வருடங்களும் என் அருமை இரட்சகரான இயேசு என்னை இனிமையாக நடத்தினார். அவர் எனக்கு எந்தத்தீங்கும் செய்யவில்லை. நான் அவரை மறுதலிக்கவே மாட்டேன். மகிழ்ச்சியோடு மரணத்தை ஏற்கிறேன், என்றார். அவரை மரத்தில் கட்டிவைத்து உயிருடன் எரித்தனர். அந்தச்சூழ்நிலையிலும் அவர் மனம் கலங்கவில்லை.கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்ற எண்ணமே நம்மை மகிழ்ச்சியாக்கும். உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவதுமில்லை, என்கிறார் இயேசுநாதர். அவரை விட மேன்மையானது இந்த சமூகத்தில் ஏதுமில்லை என்பதை உணருங்கள்.