பதிவு செய்த நாள்
29
மே
2015
12:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழாவின் போது, கொட்டித்தீர்த்த மழையால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா, கடந்த, 10ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. 15ம் தேதி பூச்சொரிதல் விழா, 17ம் தேதி காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த கம்பத்துக்கு, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், புனித நீர் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை, மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. மாலை, 5.15 மணிக்கு கம்பம் அமராவதி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவிலில் இருந்து, அமராவதி ஆற்றுக்கு கம்பம் செல்லும் வழியில் பக்தர்கள் வெள்ளம் நிரம்பி வழிந்ததால், கரூர் டவுன் போலீஸார், போக்குவரத்து போலீஸார் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த போலீஸார் என, 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஜவஹர் பஜார் செல்லும் வழியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, டூவீலர் உட்பட அனைத்து வாகனங்களும், மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.
மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஜோசி நிர்மல்குமார் தலைமையில், டி.எஸ்.பி., பெரியய்யா, மற்றும் போலீஸார், அமராவதி ஆற்றில் கம்பம் விடும் வரை, பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் இல்லாமல், அமைதியாக மாரியம்மன் கோவில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடந்தது. கம்பம் விடும் நிகழ்ச்சி முடிந்ததும், இரவு, 8.30 மணிக்கு இடியுடன் கூடிய மழை துவங்கி, இரவு, 11 மணி வரை நீடித்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.