சதுரகிரியில் பக்தர்களுக்கு 3 நாள் அனுமதி: மீட்புப் படையினர் உஷார்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2015 12:06
வத்திராயிருப்பு:சதுரகிரி மலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 15 நாட்களாக மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று நடக்கும் பவுர்ணமி பூஜைக்காக மூன்று நாட்களுக்கு மட்டும் தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. சதுரகிரி மலையில் மே 17 அன்று பக்தர்கள் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்தனர். தீயணைப்பு, வனத்துறை, காவல்துறையினர் பக்தர்களை கயிறுகட்டி மீட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 9 பேர் இறந்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கு செல்ல போலீசார் வனத்துறையினர் தடைவிதித்தனர். இதனால் கடந்த 15 நாட்களாக பக்தர்கள் செல்லவில்லை. வெளி மாநிலம் மற்றும் நீண்ட துாரத்தில் இருந்து விபரம் தெரியாமல் வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மலையில் பிரசித்தி பெற்ற பவுர்ணமி பூஜை இன்று நடக்கிறது; இதற்கு ஏராளமான பக்தர்கள் வருவர். இதை தொடர்ந்து தடை 3 நாட்களுக்கு விலக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று காலை முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். ஜூன் 3 வரை காலை 6 மணி முதல் மாலை 4 வரை மலையேற அனுமதி உண்டு. மாலை 4 மணிக்கு மேல் வந்த பக்தர்களை மலையேற போலீசார் அனுமதிக்காததால் அடிவாரத்தில் உள்ள தோப்பு மடங்கள் ஷெட்களில் தங்கினர். மலையேறிச் சென்ற பக்தர்களும் மாலை 4 மணிக்கு பின் கீழே இறங்க அனுமதிக்கவில்லை. பக்தர்கள் மலையில் உள்ள அன்னதான மடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் கடந்த முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாங்கேணி ஓடை வழுக்குப்பாறை சங்கிலிப்பாறை போன்ற இடங்களில் தீயணைப்பு படையினர் வனத்துறையினர் மீட்புக் கருவிகளுடன் முகாமிட்டுள்ளனர்.