பதிவு செய்த நாள்
04
ஜூன்
2015
11:06
திருப்பூர் : திருப்பூர் அருகே நடந்த கோவில் திருவிழாவில், கருப்பராயன், பெரியண்ணன், சின்னண்ணன் சுவாமிக்கு, கொதிக்கும் பொங்கலை வெறும் கையால் படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர் மாவட்டம் எஸ்.பெரியபாளையத்தில் உள்ளது, கருப்பராயன், கன்னிமார், பெரியண்ணன், சின்னண்ணன் கோவில். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூச்சாட்டு விழா நடத்தப்படும். அதன்படி, வைகாசி 5ல் விழா துவங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடந்தன.நேற்று, கருப்பராயன், கன்னிமார், பெரியண்ணன், சின்னண்ணன் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. உச்சி பூஜையில், அருளாளிகள் அருள் வந்து ஆடினர். கோவில் வளாகத்தில், அடுப்பில் தயாரான சூடான பொங்கலை, வெறும் கரங்களால் அள்ளிச்சென்று, கருப்பராயனுக்கு படைத்து வழிபட்டனர். பக்தர்கள் கூறுகையில், 250 ஆண்டுகளாக, இந்த வழிபாடு தவறாமல் பின்பற்றப்படுகிறது. முன்னோர் வழக்கத்தை, பழமை மாறாமல் நாங்களும் பின்பற்றுகிறோம் என்றனர்.