பதிவு செய்த நாள்
04
ஜூன்
2015
03:06
சூரிய குல மன்னன் அஜன் அயோத்தியை ஆண்டு வந்தான். அவனது மனைவி இந்துமதி, பேரழகி, ஒரு சாபத்தின் விளைவாக பூலோகத்தில் பிறந்த தேவமாது. இது இந்துமதிக்கே தெரியாது. அஜன், இந்துமதியின் மேல் உயிராக இருந்தான். ஒரு நாள் ஆகாய மார்க்கமாக நாரதர் செல்கையில், அவரது மகதி என்ற வீணைக்குச் சூட்டியிருந்த பூமாலை நழுவி அரண்மனை உத்யான வனத்திலிருந்த இந்துமதியின் கழுத்தில் விழுந்தது. அதுவே அவளது சாப விமோசனமானதால், அக்கணமே இந்துமதியின் உயிர் பிரிந்தது. அஜன் திடுக்கிட்டு, இந்த மாலையில் நஞ்சு கலந்திருக்க வேண்டும். அதை சுவாசித்ததால் இந்துமதி உயிரிழந்தாள் என நினைத்து, பித்தனைப் போல் பிணத்தின் கழுத்திலிருந்த மாலையை தான் சூடிக் கொண்டான். அது மட்டுமின்றி, துக்கம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டான்.
அஜனின் குமாரனான தசரதன், அப்போது எட்டு மாதக் குழந்தை, மந்திரி சுமந்திரர் அரசு அலுவல்களைக் கவனித்துக் கொண்டார். சாஸ்திர, அஸ்திர வல்லுனரான மருதன்வர் வசிஷ்டரின் ஆப்த சினேகிதர், தசரதரை வளர்க்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார் வசிஷ்டர். ஒரே சமயத்தில் பத்து (தச) ரத வீரர்களை சமாளிக்கும் வல்லமை பெற்ற வித்தகனாக வளர்ந்தான் தசரதன், பதினெட்டாவது வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். வடகோசல சிற்றரசன் கப்பம் கட்ட அயாத்திக்கு வரும்போதெல்லாம் மகள் கவுசல்யாவையும் உடன் அழைத்துவருவான். கவுசல்யாவின் சவுந்தர்யம் தசரதனை ஈர்த்தது, வடகோசலனும், வசிஷ்டரும் சம்மதிக்கவே, திருமண ஏற்பாடுகள் மும்முரமாயின. தசரதன் - கவுசல்யாவுக்குப் பிறக்கும் புத்திரனே தனக்கு யமன் என்பதை அறிந்து கொண்ட இராவணன் கவுசல்யாவை ஒரு பெட்டியில் அடைத்து சரயு பிரவாகத்தில் போடச் செய்தான்.
படகில் சென்று கொண்டிருந்த தசரதன் இதைக் கண்டு, பெட்டியைக் கைப்பற்ற ஆற்றில் பாய்ந்தான். இதற்குள் பெட்டி சங்கமத்தைக் கடந்து கங்கையில் மிதந்து சென்றது. தசரதனும் கங்கையில் நீந்தி நீந்திக் களைத்தான். அப்போது ஆகாயத்தில் பறந்து சென்ற ஜாடயு கீழே பாய்ந்து தசரதனை முதுகில் சுமந்து கங்கையும், கடலும் சங்கமமாகும் இடத்துக்குப் பக்கத்திலுள்ள ஒரு தீவில் சேர்த்தார். அதோடு, கனிகளைப் பறித்து வந்து தசரதனின் பசியாற்றினார். பசியாறிய தசரதன் ஜடாயுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு, இன்று முதல் நீ என் உயிர் நண்பன் எனக் கூறி மனம் நெகிழ்ந்தான். தசரதனின் நோக்கத்தை அறிந்த ஜடாயு, பெட்டி மற்றொரு தீவிலிருப்பதைக் கண்டறிந்து, அவனை அத்தீவில் சேர்த்தார். நாரதரும் அப்போது அங்கு வர, தசரதன் - கவுசல்யா விவாகம் சம்பிரதாயமாக நிகழ்ந்தது. பின்னர், ஜடாயுவே தம்பதிகளைப் பெட்டியில் அமரச் செய்து அயோத்தியில் சேர்த்து விடை பெற்றார்.
தசரதன் - கவுசல்யாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அக்குழந்தைக்கு கால்கள் விளங்காமலிருந்தன. வேறொருவருக்கு ஸ்வீகாரம் கொடுத்தால் ஊனம் நிவர்த்தியாகும் என்று குலகுரு வசிஷ்டர் கூற, குழந்தை சாந்தாவை தன் சினேகிதன் அங்க தேசத்தரசன் ரோமபாதனுக்குத் தத்துக் கொடுத்தான். மூலிகை வைத்தியத்தால் குணமடைந்த சாந்தா, ரிஷ்ய சிருங்கருக்கு மாலையிட்டாள். தனியாகப் பெட்டியில் இருந்த கவுசல்யையின் பயம், ஆறு மாதமாகியும் நீங்காதிருந்த நிலையில் கருவுற்றதாலும், நெருங்கிய தாயாதியும், ஒரே கோத்திரமுமான வடகோசலன் புத்திரியை மணந்ததாலும் இப்படி நிகழ்ந்ததாக வசிஷ்டர் சமாதானம் சொன்னார்.