பதிவு செய்த நாள்
09
ஜூன்
2015
11:06
திருச்சி : "திருச்சி மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவிலுக்கு வரும் நான்கு மாதங்களில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என கோவில் உதவி கமிஷனர் மற்றும் செயல் அலுவலர் சுரேஷ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருச்சி மாநகரின் மையப்பகுதியில், 217 அடி உயரமும், 417 படிகளை உடைய மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவில் உள்ளது. சரித்திர தொன்மை வாய்ந்த கோவிலில், ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா, தேர்திருவிழா, தெப்பத்திருவிழா உற்சவங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.பாடல் பெற்ற ஸ்தலமான இக்கோவிலுக்கு கடந்த, 2000ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்த கும்பாபிஷேகத்திற்காக, கடந்த, 12.06.2013ல் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் வேலைகள் தொடங்கியது.ஹிந்து சமய அறநிலையத்துறை உத்தரவின்படி, தொல்பொருள் துறையின் கருத்துரு பெற்று, அதன் அடிப்படையில், விமானங்கள், சாலை கோபுரம், ராஜகோபுரம் சுதை சிற்பங்கள் மராமத்து மற்றும் வர்ணம் தீட்டப்பட்டு, திருப்பணி வேலைகள், 60 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள, 40 சதவீத பணிகள் வேகமாக நடந்து வருகிறது.உச்சிபிள்ளையார் தங்க விமானம் புதுப்பிக்க, 5,340 கிராமில் தகடுகள் போர்த்தப்பட்டு உபய திருப்பணியாக முடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், கோவில் கும்பாபிஷேகம், மாதத்துக்குள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.