பதிவு செய்த நாள்
20
ஜூன்
2015
11:06
இறைவன் நல்ல சந்தர்ப்பங்களை அளித்தும், சிலர் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நற்பலன்களை இழந்து விடுவார்கள். படிக்க வேண்டிய நேரத்தில் படிக்காமல் மதிப்பெண்ணை இழந்த மாணவன், பிற்காலத்தில் வேலை கிடைக்காமல் திண்டாடுவான். கல்வியின் முக்கியத்துவம் அபரிமிதமானது என்பது அவனுக்கு பிற்காலத்தில் தான் புரியும்.
பேரரசர் ஒருவர், பாக்தாத் மன்னர் கலீபா அருண்அல் ரஷீத்துக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார். “இனிமேல் பாக்தாத்திற்கு கப்பம் கட்டமாட்டோம். மேலும், இதுவரை கட்டிய கப்ப பணத்தையும் திருப்பித் தர வேண்டும். செய்யத் தவறினால் போர்,” என எச்சரிக்கை செய்திருந்தார். கலீபா கோபமடைந்தார். போர் நடந்தது. கலீபா வெற்றி பெற்றார்.
தோற்ற பேரரசர், “கலீபா! இதற்கு முன்பு கட்டிய கப்பத்தை விட அதிகமாகத் தருகிறோம், எங்களை விட்டு விடுங்கள்,” என கெஞ்சினார்.
“சரி...அப்படியானால், உங்கள் நாட்டிலுள்ள அறிவியல் நூல்களை எங்களுக்கு கப்பமாகத் தர வேண்டும்,” என்றார்.
பேரரசரும் அவற்றைக் கொடுத்தார். அதை அரபு மொழியில் மொழி பெயர்த்த கலீபா, தங்கள் நாடு அறிவியல் ரீதியான முன்னேற்றம் பெற முயற்சியெடுத்தார்.
“கல்விக்கு அழிவே இல்லை. அதுபோல், அதற்காக கொடுக்கும் பொருளுக்கும் அழிவில்லை,” என்கிறார் நபிகள் நாயகம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.16 மணி