பதிவு செய்த நாள்
23
ஜூன்
2015
11:06
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் தங்குவதற்கு, இணையதளம் மூலம் அறைகளை முன்பதிவு செய்யும் வசதியை, ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர, இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்து வருகிறது. திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள், குறைந்த வாடகையில் அறை, குடில்களில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம், தணிகை, கார்த்திகேயன், சரவணபொய்கை என, மூன்று இடங்களில், தேவஸ்தான விடுதிகளை கட்டியுள்ளது. இதுநாள் வரை சேவை டிக்கெட், குடில்களின் முன்பதிவுக்காக, 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே, பக்தர்கள் கோவில் அலுவலகத்திற்கு நேரில் வந்து பெற வேண்டியிருந்தது. இதற்காக, வெளியூரில் இருந்து ஒரு நாள் அல்லது ஒரு வாரம் முன்னதாக, பக்தர்கள் வந்து முன்பதிவு செய்வர்.
குறிப்பிட்ட நாளில், மீண்டும் பக்தர்கள் வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர். இதனால், பக்தர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர். விடுதி அறைகள் முன்பதிவு செய்வதற்கு, பக்தர்கள் சிரமப்படுவதை தொடர்ந்து, இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் திட்டத்தை செயல்படுத்த, கோவில் நிர்வாகம் தீர்மானித்து, அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, www.tirutanigaimurugan.tnhrce.in என்ற இணையதளம் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம், கோவில் குறித்த முழு தகவல்களை, பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில், கோவிலின் தல வரலாறு, அமைப்பு, பூஜைகள், முக்கிய திருவிழாக்கள், குடில்கள் கட்டணம், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ஆகியவற்றையும் பக்தர்கள் தெரிந்து கொள்ளலாம்.தவிர, கோவில் சொத்து விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 21 சொத்து விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் புகழேந்தி கூறியதாவது: முதற்கட்டமாக, தணிகை, கார்த்திகேயன் இல்லங்களில் தங்கும் அறைகளை இணையதளம் மூலம், பக்தர்கள் தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.இந்த வசதி வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும். பின், படிப்படியாக, அபிஷேகம், சேவை டிக்கெட்டுகளும், அதே இணையதளம் மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்படும். கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, வருவாய் துறையினர் அளவீடு செய்து வருவதால், முழுமையாக சொத்து விவரம், விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் பேசுமா?
இணையதளம் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளது. http://www.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருப்பது போன்று, தமிழ் வடிவமும் இணைந்திருக்க ஆவன செய்யலாம். அருகில் உள்ள கோவில்கள் பட்டியலில், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வடபழனி ஆண்டவர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆகிய கோவில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளை பட்டியலிடுவதில் துவங்கி, ஏதோ குழப்பத்தில், பிற வில்கள் சேர்க்கப்பட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அருகில் உள்ள கோவில்களின் பட்டியலில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் கோவில்களுடன், சென்னை கோவில்களையும் இணைத்திருக்கலாம்.