Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாண்டூக்ய உபநிஷதத்திற்கான சாந்தி ... எல்லாம் இறைவனே! எல்லாம் இறைவனே!
முதல் பக்கம் » மாண்டூக்ய உபநிஷதம்
மாண்டூக்ய உபநிஷதம் - ஒன்றென்றிரு!
எழுத்தின் அளவு:
மாண்டூக்ய உபநிஷதம் - ஒன்றென்றிரு!

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2015
02:06

முப்பொருள் உண்மை: நாம், நாம் வாழ்கின்ற உலகம், இரண்டிற்கும் அடிப்படையாக விளங்குகின்ற இறைவன் - இந்த மூன்றும் அடிப்படை உண்மைகள். இந்த மூன்றும் உண்மையில் என்ன, இவற்றிற்கு இடையே நிலவுகின்ற தொடர்பு என்ன? - உலகின் சிந்தனையாளர்களை அன்றும் இன்றும் ஒருபோலவே தூண்டி வருகின்ற கேள்விகள் இவை.

நமது உபநிஷத ரிஷிகள் இறையுணர்வாளர்களாக (ட்தூண்tடிஞிண்) இருந்தார்கள். அதாவது, இறையனுபூதி பெற்றவர்களாக, கடவுளுடன் நேரடித் தொடர்பு உடையவர்களாக இருந்தார்கள். அதனுடன், மாபெரும் சிந்தனையாளர்களாகவும் இருந்தார்கள். அதனால்தான் உபநிஷதங்கள் என்னும் சிந்தனைக் கருவூலத்தை அவர்களால் தர முடிந்தது. எல்லா துறைகளிலும் சிந்தனையின் சிகரங்களை எட்டிப்பிடித்தார்கள் அவர்கள். நாம் மேலே கண்ட அடிப்படை உண்மைகளையும் அவர்கள் சிறப்பாக ஆராய்ந்தார்கள்; சிறப்பான பதில்களையும் கண்டார்கள்.

ஒருமையை நோக்கி:

பாரதம் மற்றும் பிற நாடுகளின் கலாச்சாரம், விஞ்ஞானம், சமயம், ஆன்மீகம் என்று எந்தத் துறையையும் ஆழ்ந்து படிப்பவர்கள் ஓர் அற்புதமான உண்மையைக் காண முடியும். எதிலும் அறுதி ஒருமையைக் காண விழைந்தது இந்திய மனம். பொருட்களின் ஓர் அறுதி ஒருமையைக் (க்டூtடிட்ச்tஞு க்ணடிtதூ) காண்பதே உபநிஷதங்களின் நோக்கம். எதை அறிந்தால் நாம் எல்லாவற்றையும் அறிய முடியும்? (கஸ்மின்னு பகவோ விஜ்ஞாதே ஸர்வமிதம் விஜ்ஞாதம் பவதி -முண்டக உபநிஷதம், 1.1.3) - இந்த ஆராய்ச்சியையே உபநிஷதங்கள் தங்கள் ஒரே கருத்தாகக் கொண்டிருக்கின்றன. என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

இதனை விளக்குகிறார் அவர்: ஒருமைநிலையைக் கண்டுபிடிப்பதுதான் விஞ்ஞானம். முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் விஞ்ஞானம் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டி விட்டது. அதுபோலவே, எந்த மூலப்பொருளிலிருந்து எல்லா பொருட்களும் படைக்கப்படுகின்றனவோ, அதைக் கண்டுபிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது, எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப்படுகின்றனவோ, அதைக் கண்டறிந்ததும் இயற்பியல் நின்று விடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும், மாறிக் கொண்டேயிருக்கும். உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனைக் கண்டுபிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், மத விஞ்ஞானம் பூரணமாகிவிடும்.

ஒன்றென்றிரு: இவ்வாறு ஆன்மீக ஒருமையை அடைந்துவிட்ட நிலையை உபநிஷதங்கள் விவரிக்கக் காண்கிறோம். அதாவது, இயற்கை அல்லது உலகம், நாம் அல்லது மனிதன், இறைவன் என்றெல்லாம் தனித்தனியாக எதுவும் இல்லை. இருப்பவை அனைத்தும் ஒன்றே. இருப்பது ஒன்றே. இந்த ஒன்றே பல்வேறு காட்சிகள் மூலம் உலகமாகவோ, சொர்க்கம், நரகம், தேவதைகள், பேய்கள், மனிதர்கள், அரக்கர்கள், பிரபஞ்சம் என்று வெவ்வேறாகத் தோன்றுகிறது.

ஆனால் எல்லாம் ஒன்றே என்று வாயால் சொல்வதால் அந்த உண்மை உணரப்படுவதில்லை. அற்புதமான வேறுபாடுகள் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில் பெயர், உருவம், ஜடம், உணர்வு என்று ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட சிந்தனைகளும் உருவங்களும் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் ஒருமையைக் காண்பது எவ்வளவு கடினமான வேலை! என்று வியக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

மரமும் மலையும் நதியும் கடலும் பறவையும் மிருகமும் மனிதனும் கடவுளும் ஒன்றாக முடியுமா?

எல்லாம் ஒன்று என்பது இந்தப் பொருளில் சொல்லப்படவில்லை.

இதனை எப்படி புரிந்து கொள்வது?

இதை ஓர் உவமை வாயிலாக விளக்கலாம். களி மண்ணிலிருந்தோ அல்லது வேறு ஏதாவது ஒரு மூலப் பொருளிலிருந்தோ எண்ணிலடங்காத விதவிதமான பொருட்கள் செய்யப்படுகின்றன. களிமண்ணாகப் பார்க்கும் போது எல்லாமே ஒன்றுதான். ஆனால் உருவத்தில், புறத்தோற்றத்தில் அவை பல்வேறாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் செய்யப்படுவதற்கு முன் தோன்றாநிலையில் மண்ணில் இருக்கவே செய்தன. மூலப்பொருள் நிலையில் அவை எல்லாம் ஒரே தன்மை உடையவை. ஆனால் வடிவம் பெற்ற பின்னர். அந்த வடிவம் நிலைத்து நிற்கும்வரை அவை தனித்தன்மை கொண்டவை. வெவ்வேறானவை. களிமண் சுண்டெலி ஒருநாளும் களிமண் யானையாக முடியாது. காரணம், களிமண்ணோடு களிமண்ணாய் ஒன்றாக இருந்த அவை, உருவம் பெற்ற அளவில், உருவம் காரணமாக வெவ்வேறாகிவிட்டன. உருவம் பெறாத களிமண் நிலையில் அவை எல்லாமே ஒன்றுதான்.

உலகமும் உயிர்களும் இறைவனிலிருந்து தோன்றியவை. அந்த நிலையில், அதாவது ஆன்ம நிலையில் உலகமும் உயிர்களும் இறைவனே; புறத்தில் காண்கின்ற தோற்ற நிலையில் அவை வெவ்வேறானவை.

ஓங்காரம்:

இருப்பது ஒன்றே என்ற இந்தக் கருத்தை ஓங்கார மந்திரத்தின்மூலம் இந்த உபநிஷதம் விளக்க முயற்சிக்கிறது. அடிப்படை உண்மைகள் மூன்று. அவை உலகம், மனிதன், இறைவன். இந்த மூன்றும் ஓங்காரமே என்று விளக்குவதன் மூலம் எல்லாம் ஒன்றே என்பதை இந்த உபநிஷதம் சுட்டிக் காட்டுகிறது.

எந்தவோர் எண்ணத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றியதோ, அந்த எண்ணத்தைக் குறிப்பிட்ட இந்த ஓம் என்ற சொல் ஒன்றினால்தான் முடியும்.... அனைத்தையும் தன்னகத்தே அடக்கியதாக விளங்கக்கூடியது இந்த ஓங்காரம் ஒன்றுதான். இதற்கு நிகராக எந்தச் சொல்லும் இல்லை என்கிறார் சுவாமி விவேகானந்தர். மேலும் அவர் விளக்குகிறார்:

அகர உகர மகர ஒலிகளின் சேர்க்கையாகிய ஓங்காரம், எழக்கூடிய எல்லா வகை ஒலிகளுக்கும் பொதுமைக் குறியீடாக விளங்குகிறது. அகர ஒலி பிற ஒலிகளிலிருந்து பிரித்து அறிய முடியாததாக, எப்போதும் அவற்றோடு சேர்ந்திருப்பதால் ஸ்ரீகிருஷ்ண பகவான், அக்ஷராணாம் அகாரோஸஸ்மி - எழுத்துக்களில் நான் அகரமாக இருக்கிறேன் என்று கீதையில் (10.33) கூறினார். மேலும், உச்சரிக்கப்படுகின்ற ஒலிகள் எல்லாமே அடிநாக்கிலிருந்து உதட்டு நுனி வரையிலுள்ள இடைப்பட்ட இடத்தில்தான் உருக்கொள்கின்றன. முதலில் தொண்டையிலிருந்து உண்டாகின்ற ஒலி அகரம். உதட்டில் முடிகின்ற கடைசி ஒலி மகரம். நாக்கின் அடிப்பகுதியிலிருந்து உதடு வரைக்கும் முன்னோக்கி உந்திவரும் ஒலி உகரம். சரியானபடி உச்சரித்தால், ஓங்காரம், ஒலியமைப்பு முறை முழுவதையுமே தன்னுள் அடக்கியதாகும். வேறு எந்த ஒலியும் இப்படி இல்லை... இந்த ஓங்காரம்தான் இறைவனைக் குறிக்கின்ற குறியீடாகும்.

ஓங்காரம், பிரணவம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற இந்த ஒலி மிகவும் புனிதமானதாக, மந்திரங்களுக்கெல்லாம் ஆதி மந்திரமாகப் போற்றப்படுகிறது. ஓங்காரத்தை உச்சரிக்கும்போது மென்மையாகத் தொடங்கி, நடுவில் சத்தத்தை அதிகரித்து, ம் என்று வரும்போது மீண்டும் மென்மையாக உச்சரிக்க வேண்டும். (பிற்சேர்க்கை 2-இல் ஓங்காரத்தை உச்சரிப்பது எப்படி? என்ற பகுதி பார்க்கவும்.)

இந்த ஓங்கார மந்திரத்தின்மூலம் உலகம், மனிதன், இறைவன் என்ற மூன்று உண்மைகளையும் விளக்க முற்படுகிறது இந்த உபநிஷதம்.

உலகம்: உலகம் என்பது என்ன? ஏதோ சூன்யத்திலிருந்து திடீரென்று படைக்கப்பட்டதல்ல உலகம். இந்தப் படைப்பை, இந்த வெளிப்பாட்டை சூன்யத்திலிருந்து தோற்றுவித்திருக்க முடியாது. காரணமில்லாமல் எந்தக் காரியமும் தோன்றாது. சூன்யத்திலிருந்து எதையுமே படைக்க முடியாது. அதுபோல் இருக்கும் எதையுமே இல்லாமல் செய்யவும் முடியாது. அது மிகமிக நுட்பமாக மாறலாம்; மீண்டும் தூலப் பொருளாகவும் மாறலாம்.... விதை மரத்தை உண்டுபண்ணுகிறது. பின்னர் விதையை விட்டுவிட்டு மரம் அழிகிறது. இந்த விதை மீண்டும் மரமாகிறது. மறுபடியும் விதை உண்டாகிறது. இப்படியே இந்த வட்டம் சுழல்கிறது.... விலங்குகளும் இப்படியே மனிதர்களும் இப்படியே எல்லாமே சில விதைகள். சில கருக்கள், சில நுட்பமான அணுக்கள் இவற்றில் தொடங்குவதுபோல் உள்ளன. பின்னர் பருமை பெற்று வளர்கின்றன. மறுபடியும் படிப்படியாக நுண்மை பெற்றுப் பழைய கருவுருவில் ஒடுங்குவிடுகின்றன. பிரபஞ்சம் முழுவதும் இப்படியேதான் நடைபெறுகிறது.

அதாவது படைப்பு அல்லது உலகிற்கு ஆரம்பமோ முடிவோ இல்லை. படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில்தான் இருக்கிறது என்று விஞ்ஞானம்  நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.... ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் படைப்பு அதாவது, உலகம் சில நேரங்களில் ஒடுக்க நிலையிலும், சில நேரங்களிலும் செயல் நிலையிலும் இருக்கிறது.

எனவே உலகம் என்பது ஒருநாள் தோன்றி பிறகு, முடிந்துவிடுவது அல்ல; ஒடுக்கத்திலிருந்து தோற்றம் தோற்றத்திலிருந்து ஒடுக்கம் என்று சுழற்சி நிலையில் உள்ளது. எப்படி? அமைதியிலிருந்து நாதம் எழுந்து வலுப்பெற்று மீண்டும் அமைதியில் கரைகிறது. அதுபோல் படைப்பும் ஒடுக்கத்திலிருந்து விரிந்து, செயல்நிலைக்கு வந்து, மீண்டும் ஒடுங்குகிறது.(1)

மனிதன்: மனிதன் என்பவன் யார் என்ற கேள்விக்கு நமது உபநிஷதங்களிலிருந்து இரண்டு முக்கியமான விடைகள் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்றை இந்த உபநிஷதத்தில் காண்கிறோம். (மனிதனைப்பற்றிய மற்றொரு கோணம் தைத்திரீய உபநிஷதத்தில் (2.2.1-2.6.1) வருகிறது. நான்கு பரிமாணங்களை உடையவர்கள் நாம் என்கிறது இந்த உபநிஷதம். விழிப்புநிலை, கனவு நிலை, தூக்கநிலை என்ற மூன்று நிலைகளில் நாம் மாறிமாறி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம். வீட்டிலும், அலுவலகத்திலும், சமுதாயத்திலும் ஒருவன் வெவ்வேறு அனுபவங்களைப் பெறுகிறான். வீட்டில் அவன் கணவன், மகன், சகோதரன் என்றெல்லாம் அறியப்படுகிறான். அலுவலகத்தில் அவன் ஓர் அதிகாரி. இத்தனை பரிமாணங்கள் அவனுக்கு இருந்தாலும், அவன் யார் என்றால் இத்தனை பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஒரு மனிதன்.

நாமும் விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளிலும் மூன்று பரிமாணங்களில் உலகத்துடன் தொடர்பு கொள்கிறோம். விழிப்பு நிலையில் இந்த உலகத்தை அனுபவிப்பது, நமது  முதற்பரிமாணமாகிய வைசுவானரன் கனவு நிலையில் அனுபவிப்பது தைஜஸன், தூக்க நிலையில் பிராஜ்ஞன், இந்த மூன்றையும் உள்ளடக்கிய மொத்தப் பரிமாணமே. ஆன்மா, இது நான்காம் பரிமாணம் என்று கூறப்படுகிறது. இந்த ஆன்மாவே மனிதன், அதாவது நாம் (3-5)

இதுவும் ஓங்கார மந்திரத்தின் வாயிலாக விளக்கப்படுகிறது. (8-12)

இறைவன்: இறைவன் என்பதற்கு மிக உயர்ந்த நிலை விளக்கத்தை இந்த உபநிஷதம் தருகிறது. இறைவன் யார்? ஆன்மாவே இறைவன் (2) என்ற மகாவாக்கியம் ( நான்கு வேதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சொற்றொடர்கள் மகா வாக்கியங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. மிகவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன இவை நமக்கும் இறைவனுக்கும் உள்ள அறுதிநிலைத் தொடர்பை விளக்குபவையாக உள்ளன:

1. ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம (பிரம்மம் பேருணர்வுப் பொருள் ) - ரிக்வேதம்
2. அஹம் ப்ரஹ்மாஸ்மி (நான் பிரம்மமாக இருக்கிறேன்) - யஜுர்வேதம்
3. தத் த்வம் அஸி (அது நீயாக இருக்கிறாய்) - சாம வேதம்
4. அயமாத்மா ப்ரஹ்ம (இந்த ஆன்மா பிரம்மம்) - அதர்வண வேதம்.)
இந்த உபநிஷதத்தில்தான் வருகிறது. இறைவன் எங்கும் நிறைந்தவர். எனவே அவர் கட்டாயமாக நம்மிலும் உள்ளார். நமது இதயத்தில் ஒளிர்கின்ற நிலையில் அவர் ஆன்மா என்று பெயர் பெறுகிறார்.

இறைவனின் சின்னமாகவும் ஓங்காரத்தை வைக்கிறது இந்த உபநிஷதம்.

எல்லாம் ஒன்றே: உலகம் என்பது செயல்நிலைக்கும் ஒடுக்க நிலைக்கும் மாறிமாறி சுழன்றுகொண்டிருக்கிறது. அதன் சின்னமாக ஓம் என்னும் மந்திரம் கூறப்பட்டது உலகம் = ஓம். (1)

அடுத்த நிலையில் ஓம் என்னும் மந்திரம் நமது மூன்று நிலைகளுக்கு ஒப்புமைப்படுத்தப்பட்டது. ஓம் = மனிதன் (3-5) உலகமும் பிரணவ மந்திரத்தின் விரிவாக உள்ளது. நாமும் பிரணவ மந்திரத்தின் விரிவாக உள்ளோம். எனவே உலகமும் நாமும் ஒரே அமைப்பில் உள்ளவர்கள் என்று ஆகிறது. எனவே உலகம் = மனிதன். இதனை சுவாமி விவேகானந்தரின் அனுபவ உண்மை மிக அற்புதமாக விளக்குகிறது. பிண்டமும் (நாம்) அண்டமும் (உலகம்) ஒரே அமைப்பில் உள்ளன. (சுவாமி விவேகானந்தர் (1890- இல் உத்தர பிரதேசத்தில் அல்மோரா போகும் வழியில் காக்ரிகாட் என்ற இடத்தில் இருந்தபோது அவருக்கு அற்புதமானதோர் ஆன்மிக அனுபவம் ஏற்பட்டது; உலகமும் நாமும் அமைப்பில் ஒன்றாக இருப்பதை அவர் அந்த அனுபவத்தின்மூலம் உணர்ந்தார். தமது அனுபவத்தை ஒரு நோட்டில் குறித்தும் வைத்திருந்தார்.) என்கிறார் அவர்.

இறைவனே நம்மில் ஆன்மாவாக நிலவுவதை உபநிஷதத்தின் இரண்டாம் மந்திரம் கூறுகிறது. அதாவது ஆன்ம நிலையில் நாமும் இறைவனும் ஒன்று என்றாகிறது. மனிதன் - இறைவன் (2)

எனவே உலகமும் நாமும் இறைவனும் தனித்தனியானவர்கள் அல்ல, மூன்றும் ஒன்றே என்பது இந்த உபநிஷதத்தின் தனிப்பெரும் கருத்தாக உள்ளது. உலகம் = மனிதன் = இறைவன். இதனைப் படிப்படியாக இந்த உபநிஷதம் விளக்குகிறது.

1. உலகமும் இறைவனும் ஓங்காரம்

ஓமித்யேததக்ஷரமிதம் ஸர்வம் தஸ்யோபவ்யாக்யானம் பூதம்
பவத்பவிஷ்யதிதி ஸர்வமோங்கார ஏவ யச்சான்யத் த்ரிகாலாதீதம்
ததப்யோங்கார ஏவ //1//

இதம் - இந்த; ஸர்வம் - அனைத்தும்; ஏதத் - இந்த; ஓம் - ஓங்காரம்; அக்ஷரம் - மந்திரம்; தஸ்ய - அதன்; உபவ்யாக்யானம்- விளக்கம்; பூதம் - சென்றவை; பவத் - இருப்பவை; பவிஷ்யத் - வருபவை; ஸர்வம் - எல்லாம்; ஓங்கார ஏவ - ஓங்காரமே; அன்யத்ச - மற்றவை; யத் - எவை; த்ரிகால அதீதம் - மூன்று காலங்களையும் கடந்தது; தத் அபி- அதுவும்; ஓங்கார ஏவ - ஓங்காரமே.

1. இந்த உலகம் அனைத்தும் ஓங்காரமே. ஓங்காரத்
தின் விளக்கத்தைக் காண்போம். சென்றவை,
இருப்பவை, வருபவை எல்லாம் ஓங்காரமே. மூன்று
காலங்களையும் கடந்ததாக எது உள்ளதோ அதுவும்
ஓங்காரமே.

சென்றவை, இருப்பவை, வருபவை எல்லாம் படைப்பு என்பதைக் குறிக்கின்றன. படைப்பாக இருப்பது ஓங்காரம். இது பிரணவ மந்திரம், சப்த பிரம்மம், நாத பிரம்மம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. உலகம் படைக்கப்பட்டபோது முதலில் எழுந்தது இந்த ஓங்கார த்வனியே. அதிலிருந்தே உலகமும் அண்ட சராசங்களும் தோன்றியதாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் தான் உலகம் அனைத்தும் ஓங்காரம் என்று இங்கே கூறப்பட்டது. கலைமகள் வீணை வாசிக்க, அந்த நாதத்திலிருந்து அண்ட சராசங்கள் பிறப்பதாக, ஸ்ரீராமகிருஷ்ணர் தமது தெய்வீகக் காட்சி ஒன்றில் கண்டார். படைப்பின் ஆரம்பம் முதல் இன்றுவரை இந்த ஓங்கார நாதம் எங்கும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் யோகிகள் இதனைக் கேட்பதாகவும் கூறப்படுகிறது. யாராலும் எழுப்பப்படாத ஓசை ஆதலால் இது அனாஹத த்வனி எனப்படுகிறது.

மூன்று காலங்களையும் கடந்தவராக இருப்பவர் இறைவன், அவரும் ஓங்காரம்.

 
மேலும் மாண்டூக்ய உபநிஷதம் »
temple news
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ... மேலும்
 
temple news
சாந்தி மந்திரம்: எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் ... மேலும்
 
temple news
ஸர்வக்ம் ஹ்யேதத் ப்ரஹ்ம அயமாத்மா ப்ரஹ்மஸோஸயமாத்மா சதுஷ்பாத் //2//ஏதத் - இந்த; ஸர்வம் - அனைத்தும்; ப்ரஹ்ம ஹி - ... மேலும்
 
temple news
உலகம், இறைவன் இரண்டும் ஓங்காரம் என்று முதல் மந்திரம் கூறியது. மனிதனும் ஓங்காரமே என்று கூறி இந்த ஐந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar