சாந்தி மந்திரம்: எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைத்திருப்பதன் காரணம் இதுவே, ஒவ்வொரு பிராகாரத்தில் சுற்றி வரும்போது மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழு மனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது. அதுபோல், அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.
உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.
தேவா; - ஓ தேவர்களே! கர்ணேபி: - காதுகளால்; பத்ரம் -நல்ல விஷயங்களை; ச்ருணுயாம - கேட்க வேண்டும்; யஜத்ரா; - பூஜிக்கத் தகுந்தவர்களே; அக்ஷபி; - கண்களால்; பத்ரம் - நல்ல விஷயங்களை; பச்யமே - காண வேண்டும்; ஸ்திரரங்கை: - உறுதியான அங்கங்களுடன் கூடிய; தனூபி: - உடலுடன்; யதாயு; - ஆயுள் முழுவதும்; துஷ்ட்டுவாம்ஸ; (துஷ்ட்டுவாம்ஸ என்பதுதான் வார்த்தை, துஷ்ட்டுவாக்ம்ஸ என்பதிலுள்ள க் பாராயண முறைக்காக சேர்க்கப்பட்டது. இவ்வாறு சேர்க்கப்படுவதைப் பல இடங்களில் காணலாம். - உங்களைத் துதிக்க வேண்டும்; தேவ ஹிதம் - தேவர்களுக்கு நன்மை செய்த வண்ணம்; வ்யசேம - வாழ வேண்டும்; வ்ருத்த ச்ரவா: - பழம்புகழ்பெற்ற; இந்த்ர: - இந்திரன்; ந; - நமக்கு; ஸ்வஸ்தி - நன்மை செய்யட்டும்; விச்வ வேதா; - எல்லாம் அறிகின்ற; பூஷா - சூரியன்; ந; - நமக்கு; ஸ்வஸ்தி - மங்கலம் செய்யட்டும்; அரிஷ்ட்டநேமி: - தீமையை அழிக்கின்ற; தார்க்ஷ்ய; - கருடன்; ந; - நமக்கு; ஸ்வஸ்தி - நன்மை செய்யட்டும்; ப்ருஹஸ்பதி; - பிருகஸ்பதி; ந; - நமக்கு; ஸ்வஸ்தி - நன்மை; ததாது - தரட்டும்!
தேவர்களே! காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும். பூஜிக்கத் தகுந்தவர்களே, கண்களால் நாங்கள் நல்ல விஷயங்களைக் காண வேண்டும். உறுதியான அங்கங்களுடன் கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்க வேண்டும். தேவர்களுக்கு நன்மை செய்த வண்ணம் வாழ வேண்டும்; பழம்புகழ் பெற்ற இந்திரன் நமக்கு நன்மை செய்யட்டும். எல்லாம் அறிகின்ற சூரியன் நமக்கு மங்கலம் செய்யட்டும். தீமையை அழிக்கின்ற கருடன் நமக்கு நன்மை செய்யட்டும் பிருகஸ்பதி நமக்கு நன்மை தரட்டும்!
உலகியலில் மூழ்கடிப்பதற்கான விஷயங்கள், உயர் வாழ்க்கையில் தூண்டுகின்ற விஷயங்கள் ஆகிய இரண்டுமே மனிதனின் முன்னால் வருகின்றன; அறிவாளி இரண்டாம் வகையைத் தேர்ந்தெடுக்கிறான் என்று கட உபநிஷதம் (1.2.2) கூறுகிறது. அவ்வாறு நல்லவற்றையும் உயர்ந்தவற்றையும் தேர்ந்தெடுப்பதற்கு நமது உடம்பிற்கும் புலன்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கும், அந்த முயற்சியில் தேவர்களின் துணையை நாடுவற்குமான மந்திரம் இது.
தேவர்கள் யார்? அவர்களுக்கு நன்மை செய்வது என்பது என்ன?
சூரியன் உதிப்பது கடலில் அலைகள் எழுவது நட்சத்திர மண்டலங்கள் வானவெளியில் வலம் வருவது என்று இயற்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும். சக்தியின் வெளிப்பாட்டைக் காண்கிறோம். இந்தச் சக்திகள் ஒவ்வொன்றையும் ஒரு தேவனாக உருவகப்படுத்தினர் நமது முன்னோர். இந்திரன், வருணன், வாயு என்றெல்லாம் நமது வேதங்கள் கூறுகின்ற தேவர்கள் இத்தகைய இயற்கை ஆற்றலின் உருவகங்களே.
மனித வாழ்வு வளம்பறெ வேண்டுமானால் இந்த இயற்கை ஆற்றல்களை வளம்பெறச் செய்ய வேண்டும். அதாவது மனிதன் இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும். உலகில் எத்தனை கோடி உயிரினங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் உணவும் வாழ வசதியும் வழங்குவதற்கு, இயற்கை அன்னை தயாராகவே இருக்கிறாள். ஆனால் அதற்கு அவளுடன் இயைந்து வாழ்வது இன்றியமையாதது. இயற்கையை நாம் அழித்தால் நாமும் அழிவோம். மாறாக, நாமும் இயற்கையும் பரஸ்பரம் பேணி வாழ்ந்தால் இயற்கையும் வாழும், நாமும் வாழ்வோம்.