வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நடந்த வெள்ளப்பெருக்கு மற்றும் உயிர்சேத சம்பவங்களை தொடர்ந்து நேற்று சென்னை அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முக மணி மலைக்கு சென்று ஆய்வு செய்தார். சதுரகிரி மலையில் மே 17ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அமாவாசை விழாவிற்காக மலைகோயிலுக்கு சென்ற இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். ஒன்பதுபேர் பலியாகினர். இந்நிலையில் நேற்று சென்னை அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முக மணி, மலைப்பகுதி சென்று ஆய்வு செய்தார். சம்பவ இடங்களை பார்வையிட்டதோடு அறநிலையத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஐந்துகோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தார். ஆடி அமாவாசை வரும் பக்தர்களை வழிநடத்தி செல்வது குறித்து மதுரை இணைஆணையர் பச்சையப்பன், கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி ஆலோசனை நடத்தினார். மலையில் உள்ள சுந்தர மகாலிங்க சுவாமி கோயில், சந்தன மகாலிங்கசுவாமி கோயில்களில் பக்தர்களை எந்த முறையில் தரிசனம் செய்து, திருப்பி அனுப்புவது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.