பதிவு செய்த நாள்
29
ஜூன்
2015
10:06
தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், குருப்பெயர்ச்சி விழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.இதில், கலெக்டர் சுப்பையன் தலைமைவகித்து பேசியதாவது:ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம், பக்தர்களின் வசதிக்காக தகரப்பந்தல் அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். விழா நடக்கும் நாட்களில், தடையில்லா மின்சார வசதி செய்து தர வேண்டும். கூடுதலாக, ஜெனரேட்டர் மூலம் மின் வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பக்தர்கள் எளிதாக ஸ்வாமி தரிசனம் செய்ய வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும்.
போலீஸார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் திட்டை பஞ்., ஆகியவை இணைந்து போதுமான அடிப்படை வசதிகளை பக்தர்களுக்கு செய்து தர வேண்டும். மின் கசிவு இல்லாமல், மின்சாரவாரியம் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், 24 மணி நேரமும் மருத்துவக்குழு, தீயணைப்பு துறையினர், ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும். தஞ்சை புதிய மற்றும் பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் இருந்தும், கும்பகோணம் பகுதியில் இருந்தும், கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சந்திரசேகரன், அறநிலையத்துறை இணை கமிஷனர் குமரதுரை, மாநகராட்சி கமிஷனர் குமார், தீயணைப்பு துறை உதவி கோட்ட அலுவலர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.