பதிவு செய்த நாள்
30
ஜூன்
2015
12:06
மதுரை: ஸ்ரீராமகிருஷ்ண மடம், கடந்த 19 ஆண்டுகளாக ஏழை மாணவ- மாணவிகளுக்கு இலவச கல்வி போதனை வகுப்புகள் நடத்தி வருகிறது. இந்த வகுப்புகள், நாள்தோறும் மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்று வருகின்றன. இதில் நான்காம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 475 ஏழை மாணவ- மாணவிகள் கல்வி கற்று பயனடைந்து வருகிறார்கள். இவர்களில் தகுதியின் அடிப்படையில் பரிசீலனை செய்து, 37 மாணவ- மாணவிகளுக்கு <உதவித்தொகை ரூ. 2,22,500 வழங்கப்பட்டது. இந்த கல்வி உதவித்தொகை 16 மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், 2 பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் 11 மாணவ- மாணவிகளுக்கும், கல்வியியல் கல்லூரியில் படிக்கும் 3 மாணவிகளுக்கும் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த விழா சுவாமி கமலாத்மானந்தர் தலைமையில், சுவாமி நியமானந்தர் (செயலாளர், விவேகானந்தா கல்லூரி, திருவேடகம்) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கல்வி உதவி தொகைகளை வழங்கி ஆசியுரை நிகழ்த்தினார்.)
இந்த நிகழ்ச்சியில் மதுரை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பின்வருமாறு உரை நிகழ்த்தினார்: நம்மால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்வது தொண்டு. அவ்விதம் நாம் செய்யும் தொண்டு கட்டாயத்தின் பேரில் செய்வதாக இல்லாமல், மனம் உவந்து செய்வதாக இருக்க வேண்டும். இறைவனுக்குச் செய்வது, இறைவனின் அடியார்களுக்குச் செய்வது, பெரியோர்களுக்குச் செய்வது, பெற்றோருக்குச் செய்வது, நாட்டிற்குச் செய்வது, பொதுமக்களுக்குச் செய்வது, ஆதரவற்றவர்களுக்குச் செய்வது, தாய்மொழிக்குச் செய்வது என்று பல விதங்களிலும் தொண்டு அமையும். தொண்டு என்பது ஒரு தெய்வீக குணம். அது சத்துவ குணத்திலிருந்து பிறக்கிறது. இந்த விதத்தில்தான் தொண்டு செய்ய வேண்டும் என்பதில்லை. மனம் இருந்தால் எத்தனை எத்தனையோ விதங்களில் தொண்டு செய்யலாம். வசதி வாய்ப்புகள் இருந்தால், நானும்தான் பெரிய பெரிய தொண்டுகள் செய்வேன்- பல விதங்களிலும் தொண்டு செய்வேன். ஆனால் அதற்கு எனக்குத்தான் வசதிகள் இல்லையே! என்று நம்மில் பலரும் சொல்கிறோம். இப்படிச் சொல்வதில் <உண்மையும் இருக்கிறது. எனினும் நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ-அந்த வட்டத்திலிருந்தே -அந்த எல்லைக்குள் இருந்துகொண்டே-நமது சக்திக்குட்பட்டே எவ்வளவோ நல்ல காரியங்களை நம்மால் செய்ய முடியும் அல்லவா? இத்தகைய தொண்டுகள் பிரதிபலனை எதிர்பாராததாக (நிஷ்காமமாக) அமைவது மேலும் சிறப்புக்கு <உரியது.
பிறருக்கு உதவுவது என்பதை, உலகில் தோன்றிய எல்லா மதங்களும் ஒரு வாழ்க்கை முறையாகவே வலியுறுத்திக் காட்டியுள்ளன. இறைவனை அடைய வேண்டுமானால் நல்ல முன்வினைப் பயன்கள் அவசியம்; கொஞ்சமாவது நல்ல செயல்கள் செய்திருக்க வேண்டும்; சிறிது தவம் -அது இந்தப் பிறவியிலோ, முற்பிறவியிலோ இருக்கலாம். என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியுள்ளார். பிறர் நலப் பணியே இறைவன் பணி என்பது சுவாமி விவேகானந்தரின் கருத்து. <உலகில் துன்பத்தில் துடிக்கும் ஓர் <உயிரின் துன்பத்தைப் போக்குவது-பிறர் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல்-இமயமலையில் தனிமையில் இருந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்வதைவிட மேலானது என்று புத்தர் கூறியிருக்கிறார். ஒருவர் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது கரையில் இருக்கும் ஒருவர், நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் இவரைக் காப்பாற்றலாமா, வேண்டாமா? என்று நினைத்துக்கொண்டிருந்தால்-அது எப்படி ஒரு முறையற்ற செயலோ, அது போன்றுதான் ஒருவர் துன்பத்திலும்-வறுமையிலும் இருக்கும்போது, அவரைக் காப்பாற்றலாமா, வேண்டாமா? என்று அவருக்கு உதவும் நிலையிலுள்ள அடுத்தவர் நினைப்பதும் ஆகும்.
பொதுவாக மற்றவர்களுக்கு, அதிலும் குறிப்பாக எளியவர்களுக்கு நாம் செய்யும் தொண்டு நமக்கு க்ஷேமநிதியாக, வைப்புநிதியாக இருந்து நம்மைப் பாதுகாக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்வது போல் தோன்றும். ஆனால் உண்மையில் மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் நமக்கு நாமேதான் உதவி செய்துகொள்கிறோம்; நமக்கு நாமேதான்-நன்மை தேடிக்கொள்கிறோம்; புண்ணியம் தேடிக்கொள்கிறோம். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது இறைவனிடத்தில் மதிப்பு வாய்ந்ததும், அவன் கருணையை நமக்குப் பெற்று தருவதுமாகும். அடியார்களிடம் ஆண்டவன் சிறப்பாகப் பிரகாசிக்கிறான்; அடியார்களும் ஆண்டவனும் ஒன்றே; அடியார்களுக்குச் செய்யும் தொண்டு ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டு ஆகும்- போன்ற கருத்துக்கள் வழிவழியாக நம் நாட்டில் நிலவி வருகின்றன. அரசர்களாக இருந்தாலும் மெய்ப்பொருள் நாயனார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் போன்றவர்கள் அடியார்களுக்குத் தொண்டு செய்யும் சீரிய வாழ்க்கை வாழ்ந்தார்கள். அடியார் மீது கொள்ளும் பக்திக்கு, அப்பூதியடிகள் சிறந்த உதாரணமாவார். அடியார்களுக்குச் செய்யும் தொண்டு உண்மையில் இறைவனுடன் நாம் கொள்ளும் உறவாகவும், பாலமாகவும் அமைகிறது. இவ்வாறு தனது சொற்பொழிவில் கூறினார்.