பதிவு செய்த நாள்
14
ஜூலை
2015
10:07
திருவண்ணாமலை : வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில், போதிய அளவு மழை பெய்யாததால், கடந்த சில நாட்களாக, வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஏரி, குளங்கள், ஆறுகள், வறண்ட நிலையிலேயே காணப்படுகின்றன. குடிநீர் பிரச்னையும் தலை தூக்கி உள்ளது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில், மழை வேண்டி, பல்வேறு இடங்களில் கழுதைகளுக்கு திருமணம், தவளை திருமணம், ஒப்பாரி வைத்து வழிபாடு ஆகியவை நடந்து வருகிறது.கண்ணமங்கலம் அடுத்த, இரும்புலி, செங்கம் பகுதி மக்கள், நேற்று முன்தினம் மாலை, ஊர் எல்லைப் பகுதியில், வருணபகவானுக்கு பொங்கல் வைத்து படையலிட்டனர். பின்னர் வேப்பிலை மீது, ஒன்பது சிறுவர்களை படுக்க வைத்து, அவர்களது வயிற்றின் மேல் கேழ்வரகு களியை வைத்து, ஒன்பது விதவைகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த, ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அருகே உள்ள, வாழியூர் கிராமம், பெரிய ஏரியில் உள்ள தஞ்சியம்மனுக்கு படையலிட்டு பொதுமக்கள் ஒப்பாரி வைத்து வழிபட்டனர். இவ்வாறு வழிபட்டால், ஓரிரு நாட்களில் மழை பெய்யும் என, அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.