75 அடி தூரத்தில் இருந்து ஏழுமலையான் தரிசனம்: பக்தர்கள் அதிருப்தி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2015 10:07
திருப்பதி: திருப்பதியில் 75 அடி துாரத்தில் இருந்து ஏழுமலையானை தரிசிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவது பக்தர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.திருப்பதியில் 2004க்கு முன் பக்தர்கள் குலசேகர படியில் (கருவறையில் இருந்து 10 அடி துாரம்); ராமுலவாரி மெட (35 அடி துாரம்) அருகில் இருந்து ஏழுமலையானை தரிசித்தனர். குலசேகரபடி அருகில் ஒரு மணி நேரத்திற்கு 1,500 பேர் என ஒரு நாளைக்கு 27 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். ராமுலவாரி மெட அருகில் ஒரு மணி நேரத்திற்கு 2,500 பேர் என ஒரு நாளைக்கு 45 ஆயிரம் பேருக்கு ஏழுமலையான் தரிசனம் கிடைத்தது.ஆனால் தினசரி பக்தர்களின் எண்ணிக்கை 80 ஆயிரமாக உயர்ந்தது. எனவே அப்போதைய செயல் அதிகாரி எல்.வி.சுப்ரமணியம் துவாரக பாலகர்களான ஜெய விஜயர் உள்ள தங்க வாசலில் (கருவறையில் இருந்து 70 அடி துாரம்) இருந்து மட்டுமே தரிசனம் செய்ய அனுமதித்தார். இதனால் ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.
வாரத்தில் இரண்டு நாள் அதாவது செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மட்டும் லகு தரிசனம் (35 அடி துாரம்) அளித்து வந்தனர். பின் வந்த செயல் அதிகாரி எம்.ஜி.கோபால் கடந்த ஆண்டு தங்கவாசல் அருகில் மூன்று அடுக்கு உயர்மேடை அமைத்து சில வினாடிகள் ஆனாலும் கண்குளிர பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வழி செய்தார்.இதன் பிறகு லகு தரிசனம் முற்றிலும் நிறுத்தப்பட்டு மகா லகு தரிசனம் மட்டுமே அமல்படுத்தபட்டு வருகிறது. தற்போது பக்தர் வருகை குறைவாக உள்ள சமயத்திலும் இதே தரிசன முறையை தேவஸ்தானம் பின்பற்றி வருகிறது. ஆனால் 500 ரூபாய் கட்டணம் கொண்ட வி.ஐ.பி., பிரேக் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு மட்டும் தேவஸ்தானம் 10 அடி துார தரிசனம் கருவறைக்குள் தீர்த்தம் சடாரி அளித்து வருகிறது. சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தேவஸ்தானம் வி.ஐ.பி. பக்தர்களுக்கு அளித்து வரும் தரிசன வசதியை குறைத்து பக்தர் வருகை குறைவாக உள்ள நாட்களில் லகு தரிசனத்தை பின்பற்ற வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.