சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி சனிவாரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 12 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மாவட்டத்தின் பிற பகுதியிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் பல ஆயிரம் பக்தர்கள் சுயம்பு மூலவரை தரிசிக்க வருவர். பக்தர்களின் வசதிக்காக தேவாரம், கம்பம், போடி, தேனி பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க சங்கராபுரம் விலக்கு, மார்க்கையன்கோட்டை ரோடு ஆகிய இரண்டு இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 6 கண்காணிப்பு கேமரா கோயில் வளாகத்தில் பொருத்தப்படவுள்ளது. போலீசார் சார்பில் மேலும் 6 கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய இடங்களில் பொருத்தப்படவுள்ளது. திருவிழா நேரத்தில் கோயில் வளாகத்தில் உள்ள குளியலறை, கழிப்பறை கட்டணமின்றி செயல்படுமென்று, கோயில் நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.