பதிவு செய்த நாள்
18
ஜூலை
2015
12:07
ஆமதாபாத் :ஜெகநாதர் ரத யாத்திரையும், ரம்ஜான் பண்டிகையும், இன்று ஒரே நாளில் வருவதால், ஆமதாபாத் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரின் முக்கிய விழாக்களில் ஒன்றான, ஜெகநாதர் ரத யாத்திரை, அந்நகரில் விமரிசையாகக் கொண்டாடப்படும்.ஆமதாபாத் ஜெகநாதர் கோவிலில் இருந்து புறப்படும் ரதங்கள், நகரில், 14 கி.மீ., சுற்றி வரும். ஏற்கனவே, மக்கள் நெருக்கம் மிகுந்த அந்த பகுதியில், ரத யாத்திரையை காண, லட்சக்கணக்கான மக்கள் திரளுவர்.இதில், இந்த நாளில், முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜானும் வருவதால், ஆமதாபாத் மாநகர போலீசார் மற்றும் நிர்வாகத்தினர், பலத்த பாதுகாப்பு மற்றும் அமைதி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் முஸ்லிம்களுக்கு, ரத யாத்திரை நிர்வாகிகள் சார்பில் இனிப்புகள் வழங்கப்படுகின்றன. அதுபோல, ரத யாத்திரை நடத்துபவர்களுக்கு, முஸ்லிம்கள் சார்பில் துணி, மாலை போன்றவை வழங்கப்படுகின்றன. ஆங்காங்கே, இரு மதங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, நல்லிணக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில், மாநிலம் முழுவதும் இருந்து, ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளனர். ரகசிய கண்காணிப்பு கேமராக்களும், சிறிய, ஆளில்லா உளவு விமான கண்காணிப்பும் செய்யப்பட்டுள்ளது.ரத யாத்திரை நிகழ்ச்சியை, முதல்வர் ஆனந்திபென் படேல், துடைப்பத்தால் வீதியை துடைத்து, துவக்கி வைக்கிறார்.இன்று, ஒடிசா மாநிலம் புரியிலும், விமரிசையான ரத யாத்திரை நடைபெறும்