சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2015 10:07
திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில், சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள திருத்தலமாகும். இங்கு 12 நாட்கள் நடக்கும் ஆடித் தபசு திருவிழா இன்று 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை நேரங்களில் கோமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் எழுந்தருளி ரதவீதி உலாவரும். 9ம் நாளான 28ம் தேதி காலை 9 மணிக்கு கோமதி அம்மனின் தேரோட்டம் நடக்கிறது. வரும் 30ம் தேதி ஆடித்தபசு திருவிழா நடக்கிறது. அன்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையை தொடர்ந்து, கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் தவக்கோலத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு செல்வார். அன்று மாலை கோயிலில் இருந்து சுவாமி சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி தபசு பந்தலை அடைந்ததும், அங்கு மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு விழா நடக்கிறது. வரும் 30ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள்.