பதிவு செய்த நாள்
20
ஜூலை
2015
02:07
பிராணாயாமத்தால்தான். பிராணாயாமத்தால், உணரும் சக்தி மிக நுட்பமாகி, அதன்மூலம் கால் விரலிலோ அல்லது கைவிரலிலோ அல்லது உடலின் எந்தப் பகுதியில் பிராணன் குறைந்துள்ளது என்பதை அறிவதற்கும் அங்கு அதைச் செலுத்துவதற்கான ஆற்றலை மனம் பெற்றிருக்கும். என்கிறார் சுவாமி விவேகானந்தர். பிராணாயாமம் என்பது நல்லொழுக்க வாழ்வின் அடிப்படையில் செய்ய வேண்டிய மூச்சுப் பயிற்சிகள். தகுந்த குருவின் வழிகாட்டுதலுடன் மட்டுமே செய்யப்பட வேண்டியவை இவை.
பிராணன்கள் இயங்குவதற்கு உணவு தேவை. உணவிலிருந்து பெறப்படும் ஆற்றல் இல்லை என்றால் பிராணனின் இயக்கம் இல்லை. வாழ்க்கையும் இல்லை. அதனால்தான் உபநிஷதம், கீதை என்று நமது சாஸ்திரங்களில் மிகப் பெரும்பாலானவையும் உணவுபற்றி விரிவாக ஆராய்கின்றன. உணவு தூயதாக இருக்குமானால் மனம் பற்றின்றி, பொறாமையின்றி, மனமயக்கமின்றி பொருட்களுடன் தொடர்புகொள்ள முடியும். அப்போது மனமும் தூய்மை அடைகிறது. இதன் காரணமாக இடைவிடாத இறைநினைவு மனத்தில் எழுகிறது.... அதே வேளையில் மனத்திற்கு அளிக்கப்படும் உணவைப்பற்றியும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று விளக்குகிறார் சுவாமி விவோகானந்தர். மனத்தின் உணவு எது? சிந்தனைகள் நல்ல சிந்தனைகளை மனத்தில் கொள்ள வேண்டும் என்பது இங்கே குறிப்பிடப்படுகிறது.
உடம்புபற்றிய இந்த ஆழ்நிலைச் சிந்தனையில் நல்லொழுக்க வாழ்வு, உணவு இரண்டும் சிந்தனைப் பொருட்களாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
ஆழ்நிலைச் சிந்தனைகளின் பலன்:
தா வா ஏதாச்சதஸ்ரச் சதுர்தா சதஸ்ரச்சதஸ்ரோ
வ்யாஹ்ருதய: தா யோ வேத ஸ வேத ப்ரஹ்ம ஸர்வே ஸஸ்மை
தேவா பலிமாவஹந்தி //5.6//
தா: வை ஏதா: - இவையே; சதஸ்ர: - நான்கு; சதுர்தா - நான்கு வகை: சதஸ்ரா: சதஸ்ர: - பதினாறு; வ்யாஹ்ருதய:- வியாஹ்ருதிகள்: தா: - அவை: ய: - யார்: வேத - அறிகிறானோ; ஸ: - அவன்; ப்ரஹ்ம - இறைவனை ; வேத - அறிய வல்லவன் ஆகிறான்; அஸ்மை - அவனுக்கு; ஸர்வே - எல்லா: தேவா: - தேவர்கள்; பலிம் - பரிசுகள்: ஆவஹந்தி - கொண்டு செல்கிறார்கள்.
5.6 இவையே நான்கு சேர்க்கைகள், நான்கு
வியாஹ்ருதிகளும் நான்கு வகைகளில் சிந்திக்கப்
படும்போது பதினாறு வனக ஆழ்நிலைச்
சிந்தனைகள் ஆகின்றன. இந்த பதினாறு வகைச்
சிந்தனைகளை அறிந்தவன் இறைவனை அறிய
வல்லவன் ஆகிறான். அவனுக்கு எல்லா தேவர்களும்
பரிசுகளைக் கொண்டு செல்கிறார்கள்.
வியாஹ்ருதி சிந்தனை1 சிந்தனை2 சிந்தனை3 சிந்தனை4
பூ: பூமி நெருப்பு ரிக் வேதம் பிராணன்
புவ: வானம் காற்று சாம வேதம் அபானன்
ஸுவ: மறு உலகம் சூரியன் யஜுர் வேதம் வியானன்
மஹ: சூரியன் சந்திரன் ஓங்காரம் உணவு
இங்கே ஒவ்வொரு வியாஹ்ருதியும் நான்கு விஷயங்களாக உருவகிக்கப்படுகிறது. மொத்தம் பதினாறு விஷயங்கள். இந்தச் சிந்தனைகளில் தேர்ச்சி பெறுபவன். வெற்றி அடைபவன் இறைவனை அறிய வல்லவன் ஆகிறான்.
இதன் பொருள் என்ன?
வாழ்க்கைக் கல்வியின் அடிப்படை அம்சங்கள்பற்றி படிப்படியாக கூறி வருகின்ற இந்தப் பகுதி அடுத்த பகுதியில் (6) தியானத்தைப்பற்றி கூறுகிறது. இதுவரை கூறிய ஆழ்நிலைச் சிந்தனைகளில் வெற்றி பெறுபவன் உண்மையாக தியானம் செய்ய வல்லவன் ஆகிறான். தியானம் என்பது மனத்தளவில் செய்யப்படுகின்ற ஒரு பயிற்சி மட்டுமல்ல; நமது ஆளுமையின் (ணீஞுணூண்ணிணச்டூடிtதூ) எல்லா அடுக்குகளிலும் (டூச்தூஞுணூண்) செயல்பட்டு, நம்மை இறையனுபூதிக்கே தகுதியாக்க வல்ல ஒரு கருவியாகும். ஆனால் அதன் உண்மையான பரிமாணங்களை உணர்ந்து, உரிய ஆயத்தங்களைச் செய்தபிறகு அதில் ஈடுபட வேண்டும். ஆழ்நிலைச் சிந்தனைப் பயிற்சிகள் அந்தத் தகுதியை நமக்குத் தருகின்றன.
தேவர்கள் தரும் பரிசு எது?
ஆழ்நிலைச் சிந்தனைகளின் வாயிலாக தன்னுடனும் இயற்கையுடனும் இயைபுடன் வாழ மனிதன் பக்குவப்படுகிறான். அவ்வாறு பக்குவப்பட்டவனுக்காக இயற்கை தன்னைத் திறக்கிறது; தன் ரகசியங்களை வெளியிடுகிறது. இயற்கை என்று கூறும்போது பொதுவாக நாம் மரங்கள், மலைகள், புல்வெளிகள், நதிகள் போன்றவற்றையே கற்பனை செய்கிறோம். ஆனால் இவை இயற்கையின் புறவுடம்பு மட்டுமே. இந்தப் புறவுடம்பினுள் திளைக்கின்ற அகவுணர்வு ஒன்று உள்ளது. மேதைகளாகத் திகழ்ந்தவர்கள் இயற்கையின் அகவுணர்வுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்தத் தொடர்பின்மூலம் அவர்கள் இயற்கையின் ரகசியங்களை அறிந்தார்கள்; அரும்பெரும் காரியங்களைச் சாதித்தார்கள். தேவர்கள் பரிசுகளைக் கொண்டு செல்கிறார்கள் என்று இந்த மந்திரம் கூறுவது இதையே, இங்கு கூறப்பட்டுள்ள ஆழ்நிலைச் சிந்தனைகளின் வாயிலாக நமக்கு இந்தப் பரிசுகள் கிடைக்கின்றன. அதைவிட முக்கியமாக, நமது உணர்வு விரிந்து தியான வாழ்விற்கு ஏற்றதாகிறது.
6. தியானம் (6.1-6.3)
வாழ்க்கைக் கல்வியின் அடுத்த அம்சமாக அமைவது தியானம். தியானம் அகத்தில் செய்யப்படுகிறது. இதுவரை நாம் கண்ட பல்வேறு சிந்தனைகளும் (3.2-3.6) ஆழ்நிலைச் சிந்தனைகளும் (5.2-5.6) மனத்தை ஒருங்கிணைப்பதற்கும், உணர்வின் ஒளியைப் பெறுவதற்குமான பயிற்சிகள் என்று கண்டோம். அந்தப் பயிற்சிகளின்மூலம் ஒருமுகப்பட்ட மனம் தியானத்தில் அகமுகப்படுத்தப்படுகிறது. அதற்காக இதயம் என்ற ஒன்றை இந்த மந்திரம் அறிமுகப்படுத்துகிறது.
இதய வெளி:
ஸ ய ஏஷோ ஸந்தர்ஹ்ருதய ஆகாச: தஸ்மின்னயம் புருஷோ
மனோமய: அம்ருதோ ஹிரண்மய: //6.1//
ய: - எது; ஏஷ - இதுவோ; ஸ: - அது: அந்தர் ஹ்ருதய: - இதயத்தில் உள்ளது; தஸ்மின் - அந்த: ஆகாச: - வெளியில்: புருஷ: - ஆன்மா: மனோமய: - உணர்வு மயமானது: அம்ருத: - அழிவற்றது: ஹிரண்மய: - பொன்னொளி வீசுவது.
6.1. இதயத்தின் உள்ளே வெளி ஒன்று உள்ளது.
அதில் ஆன்மா விளங்குகிறது. அது உணர்வுமய
மானது. அழிவற்றது. பொன்னொளி வீசுவது.
இதயம்பற்றி பேசப்படுகிறது. லப்டப் என்று துடித்துக் கொண்டிருக்கின்ற பவுதீக இதயம் அல்ல இது. பவுதீக இதயம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். இது ஆன்மீக இதயம், இதற்கு மூன்று அடையாளங்களை நாராயண ஸூக்தம் குறிப்பிடுகிறது; ஒன்று, தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் உள்ளது. பவுதீக இதயமும் அதே தூரத்தில்தான் உள்ளது, ஆனால் அது சற்று இடது புறம் உள்ளது. ஆனால் ஆன்மீக இதயம் நடுவில் உள்ளது. இரண்டு, சுடர் வரிசையால் சூழப்பட்டுள்ளது. மூன்று, அந்த இதயமும் பிரகாசிக்கிறது.(அதோ நிஷ்ட்ட்யா விதஸ்த்யாந்தே நாப்யாமுபரி திஷ்ட்டதி ஜ்வாலமாலாகுலம் பாதீ விச்வஸ்யாயதனம் மஹத் - தைத்திரீய ஆரண்யகம்) 4.10.13 இந்த மூன்று அடையாளங்களும் பவுதீக இதயத்திற்குப் பொருந்தாது.
இந்த இதயத்தின் உள்ளே உள்ளது ஒரு வெளிதாமரை மொட்டுப் போன்ற இதயம் நாற்புறங்களிலும் நாடிகளால் சூழப்பட்டு தொங்குகிறது. அதன் உள்ளே நுண்ணிய ஆகாசம் உள்ளது. அனைத்தும் அதில் நிலை பெற்றுள்ளன.
(1. ஸந்ததம் சிலாபிஸ்து லம்பத்யாகோச ஸன்னிபம் தஸ்யாந்தே ஸுஷிரம் ஸூக்ஷ்மம் தஸ்மின் ஸர்வம் ப்ரதிஷ்ட்டிதம்// தைத்திரீய ஆரண்யகம், 4.10.13
சாந்தோக்ய உபநிஷதம் இதனை மிக அழகாகக் கூறுகிறது; இந்த உடம்பினுள் தாமரை போன்ற சிறு மாளிகை உள்ளது. அதனுள் அக வெளி உள்ளது. அதில் இருப்பதைத் தேட வேண்டும்....... (புறத்தில் காணப்படுகின்ற) வெளி எவ்வளவு பெரியதோ இதயத்தின் உள்ளே உள்ள வெளியும் அவ்வளவு பெரியது . வானுலகும் பூவுலகும் இதனுள் அடங்கும் அக்கினி, வாயு, சந்திரன், சூரியன், மின்னல், நட்சத்திரங்கள் இன்னும் இந்த உலகில் என்னென்ன உண்டோ, என்னென்ன இல்லையோ அவையெல்லாம் இதனுள் உள்ளன. (2. யதிதம் அஸ்மின் ப்ரஹ்மபுரே தஹரம் புண்டரீகம் வேச்ம தஹரோஸஸ்மின் அந்தராகாச: தஸ்மின் யதந்தஸ்தத் அன்வேஷ்ட்டவ்யம்... யாவான் வா அயம் ஆகாச: தாவான் ஏஷ அந்தர்ஹ்ருதய ஆகாச உபே அஸ்மின் த்யாவா ப்ருதிவீ அந்தரேவ ஸமாஹிதே உபௌ அக்னிச்ச வாயுச்ச ஸூர்யாசந்த்ரமஸாவுபௌ வித்யுன் நக்ஷத்ராணி யச்சாஸ்யேஹாஸ்த்தி யச்ச நாஸ்தி ஸர்வம் ததஸ்மின் ஸமாஹிதம் இதி. - சாந்தோக்ய உபநிஷதம், 8.1.1,3
நாடிகள்: மனத்தை அகமுகப்படுத்துவதற்கான வழியில் பிரபஞ்சம், சமுதாயம் போன்ற பெரிய சிறிய வட்டங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட மனத்தின் எல்லை இங்கே இன்னும் சுருக்கப்படுகிறது. அதற்காக அகத்திலுள்ள பல்வேறு விஷயங்கள் இங்கே அறிமுகப்படுத்தப் படுகின்றன. முதலில் இதயம் பற்றி கண்டோம். இங்கே நாடிகள்பற்றி பேசப்படுகிறது.
இதயம், நாடிகள் போன்றவை சாதாரணக் கண்களாலோ கருவிகளாலோ அறியப்படுபவை அல்ல. பிரார்த்தனை, தெய்வீக வாழ்க்கை, ஆழ்நிலைச் சிந்தனைகள் போன்றவை மூலம் தூய்மையும் ஆற்றலும் வாய்ந்த மனத்தினால் மட்டுமே அறியத் தக்கவை.
அந்தரேண தாலுகே ய ஏஷஸ்தன இவாவலம்பதே ஸேந்த்ர
யோனி: யத்ராஸௌ கே சாந்தோ விவர்த்ததே வ்யபோஹ்ய சீர்ஷ
கபாலே //6.2//
தாலுகே - அண்ணத்தின்; அந்தரே - நடுவில்; ய; ஏஷ: - அது: ஸ்தன: இவ - பசுவின் காம்புபோல்: அவலம்பதே- தொங்குகிறது; ச - அது; இந்த்ர யோனி: - இறைவழி: யத்ர - எங்கு: அஸௌ - அந்த: கேச அந்த: - முடிகளின் அடிப்பாகம்; விவர்த்ததே - பிரிந்து நிற்கிறதோ; சீர்ஷ கபாலே - மண்டையோட்டில்; வ்யபோஹ்ய - பிளந்துகொண்டு.
6.2 அண்ணம் முடியும் இடத்தில் பசுவின் காம்பு
போன்ற உள்நாக்கு தொங்குகிறது. அது இறைவனை
அடைவதற்கான வழி. அதன் வழியாகச் செல்கின்ற
நாடி ஒன்று முடிகளின் அடிப்பாகம் பிரிந்து நிற்கின்ற
இடத்தில் மண்டையோட்டைப் பிளந்து செல்கிறது.
இதயத்தின் நாடிகள் நூற்றொன்று. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறது. அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவன் பல்வேறு கீழ் உலகங்களில் உழல்கிறான் (சதம் சைகா ஹ்ருதயஸ்ய நாட்ய: தாஸாம் மூர்தானமபி நி:ஸ்ருதைகா தயோர்த்வமாயன் அம்ருதத்வமேதி விஷ்வங்ஙன்யா உத்க்ரமணே பவந்தி - கட உபநிஷதம் 2.3.16. ) என்கிறது கட உபநிஷதம்.
இதயம் என்பது பிராணனின் இருப்பிடம். உணர்ச்சிகள், செயல்பாடுகள் என்று வாழ்க்கையின் அனைத்தும் இங்கிருந்தே கட்டுப்படுத்தப்படுகின்றன. விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை மூளை அனைத்துச் செயல்களின் மையமாக இருந்தாலும் நமது சாஸ்திரங்கள் இதயத்தையே மையமாகக் கொள்கின்றன. நான் என்று சொல்லும்போதும் சரி, ஆழ்ந்த மனக் கவலை, அளவற்ற சந்தோஷம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போதும் சரி, இதயத்தில் கைவத்தே நாம் பேசுவது இங்கு நினைவுகூரத் தக்கது. இந்த இதயம் நாம் அறிந்த பவுதீக இதயம் அல்ல. இது உணர்ச்சி இதயம்.
இந்த இதயத்திலிருந்து நூற்றொரு நாடிகள் புறப்படுகின்றன. இவற்றின்மூலமே கட்டளைகள் இடப்படுகின்றன. அனுபவங்கள் பெறப்படுகின்றன. இவற்றுள் ஒன்று உச்சந்தலையின் வழியாகச் செல்கிறது. உச்சந்தலையில் பிரம்ம ரந்திரம் என்ற வாசல் உள்ளது. இந்த பிரம்ம ரந்திரத்தின் வழியாக ஒரு நாடி செல்கிறது. இதன் வழியாக உயிரை விடுபவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நூறு நாடிகளும் மீதி பத்து வாசல்களுள் ஏதாவது ஒன்றில் நிறைவுபெறுகின்றன. இவற்றின் வழியாக உயிர் வெளியேறினால் மீண்டும் பிறவி வாய்க்கிறது. ஆசைகளற்ற யோகியால் மட்டுமே பிரம்ம ரந்திரத்தின் வழியாக உயிரை வெளியேற்ற முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பிரம்ம ரந்திரத்தின் வழியாக உயிரை விடுபவன் மீண்டும் பிறப்பதில்லை. அதனால்தான் இதனை இறைவழி அதாவது இறைவனை அடைவதற்கான வழி, மீண்டும் பிறப்பற்ற வழி என்று மந்திரம் கூறுகிறது.
தியானத்தின் பலன்:
பூரித்யக்னௌ ப்ரதிதிஷ்ட்டதி புவ இதி வாயௌ
ஸுவரித்யாதித்யே மஹ இதி ப்ரஹ்மணி ஆப்னோதி
ஸ்வாராஜ்யம் ஆப்னோதி மனஸஸ்பதிம் வாக்பதிச்சக்ஷுஷ்பதி:
ச்ரோத்ரபதிர் விஜ்ஞானபதி: ஏதத் ததோ பவதி ஆகாச சரீரம்
ப்ரஹ்ம ஸத்யாத்ம ப்ராணாராமம் மன ஆனந்தம் சாந்தி
ஸம்ருத்தமம்ருதம் இதி ப்ராசீன யோக்யோபாஸ்வ //6.3//
பூ: இதி - பூ; என்பதாக; அக்னௌ - அக்கினியில்; ப்ரதிதிஷ்ட்டதி - நிலைபெறுகிறான்; புவ: இதி - புவ: என்பதாக: வாயௌ - காற்றில்; ஸுவ: இதி - ஸுவ; என்பதாக: ஆதித்யௌ - சூரியனில்; மஹ: இதி - மஹ: என்பதாக: ப்ரஹ்மணி - இறைவனில்; ஸ்வாராஜ்யம் - சொந்த இடத்தை; ஆப்னோதி - அடைகிறான்; மனஸ - மனத்திற்கு பதிம் - தலைவனாகிறான்; வாக்பதி: - வாக்கிற்குத் தலைவன்; சக்ஷு: பதி - கண்களின் தலைவன்: விஜ்ஞானபதி: - அறிவின் தலைவன்; ஏதத் தத: - அதன்பிறகு; ஆகாச: - வெளியை; சரீரம் - உடம்பாக; ஸத்ய ஆத்ம - சத்தியத்தை ஆன்மாவாக: ப்ராணாராமம் - பிராணனில் செயல்படுகின்ற; ஆனந்தம் - ஆனந்தத்தை; மன - மனமாக உடைய; சாந்தி ஸம்ருத்தம் - அமைதி நிறைந்த; அம்ருதம் - அழிவற்ற; ப்ரஹ்ம - பிரம்ம மாக; பவதி- ஆகிறான்; இதி - இவ்வாறு; ப்ராசீன யோக்ய - தகுதி உடையவனே; உபாஸ்வ - தியானம் செய்.
6.3. நான்கு வியாஹ்ருதிகளையும் தியானம்
செய்பவன் முறையே அக்கினி, காற்று, சூரியன்
ஆகியவற்றின் நிலைபெறுகிறான்; இறைவனில்
நிலைபெறுகிறான். அவன் தனக்குத்தானே தலைவன்
ஆகிறான். மனம், வாக்கு, கண்கள், அறிவு ஆகியவற்
றிற்குத் தலைவனாகிறான். அதன்பிறகு வெளியை
உடம்பாகவும் சத்தியத்தை ஆன்மாவாகவும்,
ஆனந்தத்தை மனமாகவும் கொண்டு பிராணனில்
செயல்படுகின்ற, அமைதி நிறைந்த அழிவற்ற
பிரம்மமாக ஆகிறான் தகுதி உடையவனே!
இவ்வாறு தியானம் செய்வாயாக.
தியானத்தினால் கிடைக்கின்ற முக்கியமான நான்கு பலன்களை இந்த மந்திரம் கூறுகிறது; இயற்கையில் நிலை பெறல், இறைவனில், நிலைபெறல், தனக்குத் தலைவனாதல் இறைவனுடன் இணைதல்.
1. இயற்கையில் நிலைபெறல்: அக்கினி, காற்று, சூரியன் ஆகியவை இயற்கையின் சின்னங்கள் முன்பு கண்ட ஆழ்நிலைச் சிந்தனைகள்மூலம் ஒருவன் அவற்றில் நிலை பெறுகிறான். அதாவது, அவற்றின்மீது ஆதிக்கம் செலுத்த வல்லவன் ஆகிறான்.
2. இறைவனில் நிலைபெறல்: தியானத்தின் இரண்டாவது பலன் இறைவனை ஆதாரமாகக் கொண்ட வாழ்க்கை வாழ்க்கையில் நல்லது, கெட்டது, எது நடந்தாலும் அது இயற்கையின் நியதிப்படி நடக்கிறது. என்று திட நம்பிக்கையுடன் அவன் இறைவனைச் சார்ந்து வாழ வல்லவன் ஆகிறான்.
3. தனக்குத் தலைவனாதல்: சாதாரண மனித வாழ்க்கை புறச் சூழ்நிலைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதாவது, சாதாரண மனிதன் சூழ்நிலையின் கைதியாக வாழ்கிறான். தியான வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் சூழ்நிலைகளின் அடிமையாக அல்லாமல் தனக்குத்தானே தலைவனாக வாழ முடிகிறது. மனம், வாக்கு, கண்கள், அறிவு என்று ஒவ்வொன்றும் அவனது கட்டளைப்படி இயங்குகிறது. அவன் தன்னை வென்றவன் ஆகிறான்.
4. இறைவனுடன் இணைதல்: தியானத்தில் மிக முக்கியமான பலன் இதுவே, ஆழ்நிலைச் சிந்தனைகளின் மூலம் மனத்தை ஒருமுகப்படுத்தி, இதய வெளியில் பொன்னொளி வீசிப் பொலிகின்ற ஆன்மாவை தியானத்தின்மூலம் காண வல்லவன் இறைவனுடன் இணைகிறான்.
7. வேள்வி:
வாழ்க்கைக் கல்வியின் அடுத்த அம்சமாகவும் முக்கிய அடிப்படைகளுள் ஒன்றாகவும் நாம் காண்பது வேள்வி. வேள்வி என்ற கருத்து மிகவும் இன்றியமையாதது. இந்த கருத்து வேதகாலத்திலிருந்தே நிலவி வருகின்ற ஒன்றாகும். பிரபஞ்சம் ஒரு வேள்விக் கூடம்: வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் பல்வேறு பரிமாணங்களில் வேள்வி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த வேள்வியில் பங்கெடுக்க ஒவ்வோர் உயிருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த உயிர் தனக்குரிய காலம்வரை வேள்வியில் ஈடுபட்ட பிறகு தன்னையே வேள்விப்பொருளாக அந்த மாபெரும் வேள்வியில் சமர்ப்பித்துவிட்டு மறைகிறது. இவ்வாறு வாழ்க்கையை ஒரு மாபெரும் வேள்வியாகக் காண்கிறது இந்து மதம்.
வேள்வி என்பது என்ன? ஒரு தெய்வத்தை உத்தேசித்து நெய், நைவேத்தியம், மலர் போன்றவற்றை அக்கினியில் சமர்ப்பிப்பது. அவ்வாறே பிரபஞ்சமாகிய அக்கினியில் நமது வாழ்க்கையைச் சமர்ப்பித்து வாழ வேண்டும். இதன் பொருள் என்ன?
நாம் பிரபஞ்சத்தில் ஓர் அங்கம் நாம் வாழ வேண்டுமானால் பிரபஞ்சத்திலிருந்து சிலவற்றை எடுத்தேயாக வேண்டும். பவுதீக நிலையில், உணவு, உடை, காற்று, சற்று உயர்ந்த நிலையில் அறிவு, அன்பு என்று பலவற்றைப் பெறுகிறோம். அவற்றைத் திருப்பிக் கொடுக்கும் விதமாக நமது வாழ்க்கை அமையும் வண்ணம் வாழ வேண்டும். அப்படி வாழாததால்தான் நாம் கட்டுண்டு வாழ நேர்வதாக கீதை கூறுகிறது. (யஜ்ஞார்த்தாத் கர்மணோஸன்யத்ர லோகோஸயம் கர்மபந்தன:)
ப்ருதிவ்யந்தரிக்ஷம் த்யௌர் திசோஸவாந்தரதிசா: அக்னிர்
வாயுராதித்யச் சந்த்ரமா நக்ஷத்ராணி ஆப ஓஷதயோ வனஸ்பதய
ஆகாச ஆத்மா இத்யதிபூதம் அதாத்யாத்மம் ப்ராணோ
வ்யானோஸபான உதானஸ் ஸமான சக்ஷு: ச்ரோத்ரம் மனோ வாக்
த்வக் சர்ம மாக்ம்ஸக்ம் ஸ்நாவாஸ்த்தி மஜ்ஜா ஏதததிவிதாய ரிஷி
ரவோசத் பாங்க்தம் வா இதக்ம் ஸர்வம் பாங்க்தேனைவ
பாங்க்தக்ம் ஸ்ப்ருணோதீதி //1//
ப்ருதிவீ - பூமி, அந்தரிக்ஷம் - இடைவெளி; த்யௌ; - வானம்; திச ;- முக்கிய திசைகள்; அவாந்தரதிசா: - இடைப்பட்ட திசைகள்; அக்னி - நெருப்பு; வாயு: - காற்று, ஆதித்ய: - சூரியன்; சந்த்ரமா: - சந்திரன்; நக்ஷத்ராணி- நட்சத்திரங்கள்; ஆப; - தண்ணீர்; ஓஷதய: - மூலிகைகள்; வனஸ்பதய; - மரங்கள்; ஆகாச: - வெளி: ஆத்மா- பிரபஞ்சம்: இதி - இவ்வாறு; அதிபூதம் - புறப்பொருட்கள்; அத - இனி: அத்யாத்மம் - அகப்பொருட்கள் பற்றி; ப்ராண: - பிராணன்; வ்யான: - வியானன்; அபான -அபானன்; உதான - உதானன்; ஸமான: - சமானன்; சக்ஷு;- கண்கள்; ச்ரோத்ரம் - காதுகள்; மன; - மனம்; வாக் - பேச்சு; த்வக் - தொடுவுணர்ச்சி; சர்ம - தோல்; மாம்ஸம் - சதை; ஸ்நாவா - தசை: அஸ்த்தி - எலும்பு; மஜ்ஜா - மஜ்ஜை; ஏதத் - இவற்றை; அதிவிதாய - ஆராய்ந்து அறிந்து; ரிஷி: - முனிவர், அவோசத் - கூறினார்: இதம் - இது; ஸர்வம் - எல்லாம்; பாங்க்தம் வை - ஐந்தின் தொகுதிகள்; பாங்க்தேன ஏவ - ஐந்தின் தொகுதியால்; பாங்க்தம் - ஐந்தின் தொகுதி, ஸ்ப்ருணோதி இதி - தாங்கப்படுகிறது.
7. பூமி, இடைவெளி, வானம், முக்கிய திசைகள், இடைப்பட்ட திசைகள், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்; தண்ணீர், மூலிகைகள், மரங்கள், வெளி, பிரபஞ்சம் - இந்த மூன்று தொகுதிகளும் புறப்பொருட்கள் பற்றியவை.
இனி, அகப் பொருட்கள் பற்றிய ஐந்தின் தொகுதிகளைக் காண்போம். பிராணன், வியானன், அபானன், உதானன், சமானன், கண்கள், காதுகள்,மனம், பேச்சு, தொடுவுணர்ச்சி, தோல், சதை, தசை, எலும்பு, மஜ்ஜை.
அகப்பொருட்களையும் புறப்பொருட்களையும் ஆராய்ந்து அறிந்த முனிவர் ஒருவர் இவ்வாறு கூறினார்; இவை ஐந்தின் தொகுதிகள், இவற்றுள் ஒன்று மற்றொன்றை நிறைவு செய்கிறது.
பிரபஞ்சத்தின் பல்வேறு மூலக்கூறுகளைப்பற்றிய சிந்தனை இது. முதல் மூன்று தொகுதிகளும் பிரபஞ்சத்தின் அங்கங்கள்; இரண்டாவது மூன்று தொகுதிகள் மனிதனின் அங்கங்கள் மனிதனால் பிரபஞ்சமும் பிரபஞ்சத்தால் மனிதனும் நிறைவு பெறுகின்றனர். அதாவது ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றன. பிரபஞ்சமும் மனிதனும் சார்ந்து வாழ்கின்ற தன்மையைச் சிந்திக்குமாறு இங்கே கூறப்படுகிறது.
சார்ந்து வாழ்வதே வேள்வி - வாழ்க்கையின் அடிப்படைக் கருத்தாகும். இதையே கீதை, நீங்கள் வேள்வியால் தேவர்களை வழிபடுங்கள். தேவர்கள் உங்களை வளம் பெறச் செய்வார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து, மேலான நன்மையை அடையுங்கள் (1. தேவான் பாவயதானேன தே தேவா பாவயந்து வ: பரஸ்பரம் பாவயந்த: ச்ரேய: பரமவாப்ஸ்யத) என்று கூறுகிறது. இவ்வாறு இயற்கையும் மனிதனும் இயைபுடன் ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டும் என்பதை வாழ்க்கைக் கல்வியின் ஓர் அடிப்படை அம்சமாகக் காண்கிறோம்.