சபரிமலையில் நாளை நிறை புத்தரிசி பூஜை: ஆக., 16ல் மீண்டும் நடை திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2015 10:07
சபரிமலை: நெற்கதிர்களை ஐயப்பனுக்கு சமர்ப்பித்து நடைபெறும் நிறை புத்தரி பூஜை நாளை சபரிமலையில் நடைபெறுகிறது. ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 16-ம் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் தினமும் வழக்கமான நெய்யபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் போன்றவற்றுடன் சகஸ்ரகலசம், உதயாஸ்தமன பூஜை, படிபூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன. இன்று இரவுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவு பெறும். நாளை அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்தரிசனம், அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 5.30 மணிக்கு நெற்கதிர்கள் கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகள் நடத்துவார். தொடர்ந்து மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நெற்கதிர்களை சுமந்து கோயிலை வலம் வந்து ஸ்ரீகோயிலுக்குள் கொண்டு சென்று பூஜை நடத்தப்படும். நெற்கதிர்களால் ஸ்ரீகோயில் அலங்கரிக்கப்படும். நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அதன் பின் வழக்கமான நெய்யபிஷேகம் நடைபெறும். இரவு படிபூஜையும் நடைபெறும். நாளை இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின் ஆவணி மாத பூஜைகளுக்காக ஆகஸ்டு 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கும்.