பதிவு செய்த நாள்
22
ஜூலை
2015
12:07
ராசிபுரம்: ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவிலில், பாலதண்டாயுதபாணி பக்தர்கள் குழு சார்பில், 26ம் ஆண்டு திருவோணம் மற்றும் 27ம் ஆண்டு சயனோற்ச விழா, ஜூலை, 27ம் தேதி நடக்கிறது. ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், பாலதண்டாயுதபாணி பக்தர்கள் குழு சார்பில், ஆண்டு தோறும் திருவோண விழா மற்றும் சயனோற்சவ விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, ஜூலை, 27ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, அன்று காலை, 7.30 மணிக்கு, பூமி, நீளா சமேத பொன் வரதராஜபெருமாள் ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகம், திரவிய திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து, கலை, 9.30 மணிக்கு, ஸ்வாமி ராஜவீதி வழியாக நகர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலை, 6 மணிக்கு, சமய நிகழ்ச்சிகள், ஆலயத்திருப்பணி செய்து வரும் சமய அன்பர்களுக்கு பாராட்டு விழா, ‘என் உயிர்க்காவலன்’ என்ற தலைப்பில், சொற்பொழிவும் நடக்கிறது. இரவு, 8 மணிக்கு, சயனோற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.