பதிவு செய்த நாள்
23
ஜூலை
2015
11:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கண்காணிப்புக்கு, ரூ.3.50 லட்சம் மதிப்பில், 14 கேமரா பொருத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்களும், பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள், தங்களது வேண்டுதலுக்காக, காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில் வளாகம், மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கம் என, 31, இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணம், தங்கம், வெள்ளி பொருட்கள், ஆகியவை ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது, உண்டியல் காணிக்கையை வீடியோ எடுத்து கொடுக்கும் வீடியோகிராஃபர், காணிக்கை பணத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் நிர்வாகத்தின் சார்பில், நிரந்தரமாக கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, 3 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 360 டிகிரியில் சுழலக்கூடிய, ஒரு கேமரா உள்ளிட்ட, 14 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.