பதிவு செய்த நாள்
14
ஜூலை
2011
11:07
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று ஆனி மாத பெரிய திருமஞ்சனம் என்றழைக்கப்படும் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு, மூலவர் ரெங்கநாதருக்கு தைலக்காப்பு செய்விக்கப்பட்டது. "பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றி புகழப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம், பெரிய திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேக விழா சிறப்பாக நடப்பது வழக்கம். ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்றுமுன்தினம்காலை ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் இருந்து, கோவில் யானை ஆண்டாள் மீது தங்கக்குடத்தில் புனித நீர், மேள, தாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. உற்சவர் அழகிய மணவாளனுக்கு ஜேஷ்டாபிஷேகம் செய்யவிக்கப்பட்டது. மூலவருக்கு தைலக்காப்பு: ஸ்ரீரங்கம் கோவில் மூலவர் திருமேனி சுதையினால் செய்யப்பட்டது. மூலவருக்கு திருமஞ்சனம் செய்யும் வழக்கம் ஸ்ரீரங்கம் கோவிலில் இல்லை. பூ, மாலைகள் அணிவிக்கப்படுவது இல்லை. வஸ்திரங்கள், திருவாபரணங்கள் மட்டுமே ரெங்கநாதருக்கு அணிவிக்கப்படுகிறது. இவருக்கு பதில் திருமஞ்சனம், மலர் அலங்காரங்கள் உற்சவரான அழகிய மணவாளனுக்கு செய்யப்படுகின்றன. அதற்குப்பதிலாக, ரெங்கநாதருக்கு சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் போன்ற வாசனை திரவியங்களை கொண்டு, பராம்பரிய முறையில் தயாரித்த தைலம், காப்பாக திருமேனியில் இடப்படுகிறது. ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு, இவ்வாண்டின் முதல் தைலக்காப்பு மூலவர் ரங்கநாதருக்கு நேற்று செய்விக்கப்பட்டது. தணிக்கை: மூலவர் ரெங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், உபய நாச்சியார்கள் திருமேனிகளில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் நேற்று களையப்பட்டு, எடைகள் சரிபார்க்கப்பட்டன. பழுது ஏற்பட்டுள்ள நகைகள் சரி செய்யப்பட்டு, மெருக்கூட்டப்பட்டது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி, கருவறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், பராமரிப்பு பணிகள் மற்றும் சிறப்பு துப்புரவுப் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. திருப்பாவாடை: ஜேஷ்டாபிஷேகத்தின் இரண்டாம் நாளாக நேற்று (13ம் தேதி) திருப்பாவாடை நடந்தது. அதன்படி, ரெங்கநாதர் கருவறையின் முன்புறம் உள்ள சாந்தனு மண்டபத்தில் துணி விரித்து, பெருமளவு சாதம் பரப்பி வைக்கப்பட்டது. அதில் நெய், கீரை, முக்கனிகள் சேர்த்து, ரெங்கநாதருக்கு அமுது செய்யவிக்கப்பட்டு இந்த பிரசாதம் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினமும், நேற்றும் மூலவர் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. விழா ஏற்பாடுகளை, கோவில் இணை கமிஷனர் ஜெயராமன், உதவி கமிஷனர் மாரியப்பன், பட்டாச்சாரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.