நெல்லையப்பர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2011 11:07
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தீர்த்தவாரி உற்சவம் கோலாகலமாக நடந்தது.நெல்லையப்பர் கோயில் ஆனித்தேர்த் திருவிழா கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது.திருவிழாவின் 9 நாட்களும் இரவு பக்தி இன்னிசை கச்சேரி, நாட்டிய நிகழ்ச்சி, சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளும், பன்னிரு திருமுறை பாராயணமும் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 12ம்தேதி கோலகலமாக நடந்தது.நேற்று(13ம்தேதி) காலை நெல்லையப்பர் கோயில் ஒன்றாம் திருநாள் மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனையடுத்து சப்தா வர்ணம் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.பின்னர் கோயில் பொற்றாமறை குளத்தின் அருகில் அஸ்திர தேவர், அஸ்திர தேவி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இரவு திருவிழா கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.