பதிவு செய்த நாள்
25
ஜூலை
2015
12:07
அவிநாசி:அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், தேவார பதிகம் பாடிய, சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூஜை விழா நடைபெற்றது.முதலையுண்ட பாலகனை மூன்றாண்டுகளுக்கு பின், சிவபெருமானை நினைத்து பதிகம் பாடி, மீட்டுத்தந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூஜை விழா, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. இதையொட்டி அவிநாசியப்பர்,கருணாம்பிகை அம்மன், சுப்ரமணியர் சன்னதிகளில், 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தன.அதன்பின், சிறப்பு அலங்காரத்தில் அம்பிகையுடன் எழுந்தருளிய சந்திரசேகரர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு காட்சியளித்து, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மங்கலம் ரோட்டில் உள்ள சுந்தரமூர்த்தி நாயனார்கோவிலில், அபிஷேகம், அலங்கார தீபாராதனை, திருமுறை விண்ணப்பம் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். அவிநாசி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.