பதிவு செய்த நாள்
27
ஜூலை
2015
11:07
அரூர்:டி.அம்மாப்பேட்டையில், அமைந்துள்ள சென்னியம்மன் கோவிலில் வரும், 3ம் தேதி ஆடிப்பெருக்கு விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு, பொதுமக்கள், பக்தர்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு, கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.அம்மாப்பேட்டையில், தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது சென்னியம்மன் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவுக்கு, வேலூர், சேலம், திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிட்டு, வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் நீராட, சமைக்க மற்றும் குடிநீர் இல்லாமல், சில ஆண்டுகளாக, சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன் வரை, இப்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், ஆற்றில் நீர் கரை புரண்டோடும். பக்தர்கள் ஆற்றில் நீராடுவதற்கும், சமைப்பதற்கும், வசதியாக இருக்கும். நடப்பாண்டு ஆற்றில் ஆங்காங்கே குழிகளில் உள்ள தண்ணீரும் மாசுபட்டு அசுத்தமாக உள்ளது.
இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தண்ணீர் இல்லாமல், அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. மேலும், ஆடிப்பெருக்கு விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு, குறிப்பாக, பெண்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால், பெண்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.கடந்த ஆண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள், குடிக்க மற்றும் சமைக்க பணம் கொடுத்து, நீரை விலைக்கு வாங்கினர். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், டூவீலர் மற்றும், கார், சரக்கு வாகனங்களுக்கு, சுங்க கட்டணம் என்ற பெயரில், 60 முதல், 150 ரூபாய் வரை அடாவடி வசூல் செய்தனர். இவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, கவனித்ததால், அதிகாரிகளும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வில்லை.ஆடிப்பெருக்கு விழாவிற்கு இன்னும், ஒரு வார காலம் உள்ள நிலையில் விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, சார்பில், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டுமென, மாவட்ட நிர்வாகத்துக்கு, பொதுமக்களும், பக்தர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், அடாவடி வசூலில், ஈடுபடுபவர்கள், அவர்களுக்கு, துணை போகும் அலுவலர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.