பதிவு செய்த நாள்
04
ஆக
2015
12:08
சேலம்: ஆடிப் பெருக்கை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில், பக்தர்கள் புனித நீராடி கோவில்களில் தரிசனம் செய்து கோலாகலமாக கொண்டாடினர். காவிரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நேற்று மேட்டூர் உள்ளிட்ட, காவிரி கரையோரங்களில் பக்தர்கள் நீராடி, காவிரி அன்னை, குலதெய்வ வழிபாடு, சுமங்கலி பூஜை, கோவில் ஆயுதங்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர். சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், முத்தங்கி அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
* சேலம், ஆலாங்கொட்டை பூட்டு முனியப்பன் கோவிலுக்கு, அய்யன் திருமாளிகை மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் கடவுள்களின் வேடம் அணிந்த படியும், அலகு குத்திக் கொண்டும் ஊர்வலமாக வந்தனர்.
* காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.
* சேலம் கோட்டை பெருமாள் கோவில் வளாகத்தில், கோட்டை மாரியம்மனுக்கு, சீர் வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோட்டை பெருமாள் கோவிலுக்கு பல்லக்கில் வந்த கோட்டை மாரியம்மனுக்கு, கோவில் நிர்வாகத்தின் சார்பில் பட்டு புடவை, வளையல் உள்ளிட்ட பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.
* சேலம், மாமாங்கம் ஊத்துக்கிணறில், முனியப்பன் கோவிலில் பக்தர்கள் புனித நீராடி முனியப்பனை வழிபட்டனர்.
* சுகவனேஸ்வரர் கோவில், உத்தமசோழபுரம் கைலாசநாதர் கோவில், இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவில், கந்தாஸ்ரமம் முருகன் கோவில், ஊத்துமலை முருகன் கோவில், குமரகிரி முருகன் கோவில் உட்பட பல கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
* பூலாம்பட்டி, கல்வடங்கம், கோனேரிப்பட்டி பகுதிகளில் காவிரி ஆற்றில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் புனித நீராடினர். பக்தர்களுக்கு பூசாரிகள் குறி சொல்லும் நிகழ்ச்சி நடந்தது. புதியதாக திருமணமான பெண்கள், தங்களின் தாலியை பிரித்து புதிய மஞ்சள் கயிற்றால் கோர்த்து, அந்த தாலியை வயதான சுமங்கலி பெண்கள் கையால் கட்டிக்கொள்ளும் விநோத பூஜையும் நடந்தது.
* தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகில், சிவசுப்ரமணியர் கோவிலில், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், காவடி ஊர்வலம், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது.
* மேட்டூர் வனத்துறை அலுவலகம் அருகே, அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், 40,000 பேருக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்பட்டது.
* தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவிலில், தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று நடந்தது. தாரமங்கலம் வேலாயுதசாமி கோவிலில் இருந்து, 1,008 தீர்த்தக்குடங்களுடன் புறப்பட்ட ஊர்வலம், முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று, கண்ணனூர் மாரியம்மன் கோவிலை அடைந்தது.