பதிவு செய்த நாள்
15
ஜூலை
2011
11:07
ஊத்துக்கோட்டை : சுருட்டப்பள்ளி, ஸ்ரீபள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா கோலாகலமாக நடந்தது. சிவபெருமான் உருவ ரூபத்தில், பக்தர்களுக்கு காட்சியளிக்கும் கோவில் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை ஒட்டி சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது. ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில் சிவபெருமான், அன்னை பார்வதி தேவியின் மடிமீது தலைவைத்து உறங்கும் காட்சி காணப்படுகிறது. சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவில், சீரமைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன், கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். கும்பாபிஷேக விழா முடிந்து, நான்கு ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, கடந்த 12ம் தேதி இங்கு ஏகாதசி ருத்ரயாகம் நடந்தது. இதையொட்டி, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, ருத்ரபாராயணம், வால்மிகீஸ்வரர் மற்றும் அன்னை மரகதாம்பிகைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பிரதோஷ விழா நடந்தது. சிவபெருமான் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மலர் மற்றும் அருகம்புல்லில் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர், வள்ளிதேவசேனா உடனுறை சுப்பிரமண்யர் மற்றும் சண்டிகேஸ்வர சுவாமி சகிதமாக உற்சவம் ரிஷிப வாகனத்தில், கோவிலை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.