பதிவு செய்த நாள்
16
ஜூலை
2011
10:07
புட்டபர்த்தி: சத்ய சாய்பாபா மகா சமாதி, பக்தர்களின் தரிசனத்திற்காக, நேற்று திறக்கப்பட்டது. பிரசாந்தி நிலையத்திலுள்ள சாய்பாபாவின் சமாதி, நேற்று குரு பூர்ணிமாவையொட்டி, மலர்களை கொண்டு விசேஷமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சத்ய சாய்பாபா, ஏப்ரல் 24ம் தேதி ஸித்தியடைந்தார். இதைத்தொடர்ந்து, சமாதி கட்டும் பணி நடந்து வந்தது. இந்த சமாதி மிகப்பிரமாண்டமாக கட்டப்படும் என, சத்ய சாய்பாபா மத்தியஅறக்கட்டளை அறிவித்து இருந்தது. இந்நிலையில், குரு பூர்ணிமாவை யொட்டி, நேற்று மகாசமாதி திறக்கப்படும் என, அறக்கட்டளை நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர். சத்யசாய்பாபா ஒவ்வொரு ஆண்டும், குரு பூர்ணிமா அன்று பிரசாந்தி நிலையத்தில் உள்ள, சாய் குல்வந்த் ஹாலில், பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியில் கூடுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு அவர் ஸித்தியடைந்த பிறகு, அவரது சமாதியில் வந்து தரிசனம் செய்வதற்காக, ஏராளமான பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்து வந்தனர். இதையடுத்து, சத்ய சாய்பாபாவின் மகா சமாதி , பக்தர்களின் தரிசனத்திற்காக, குரு பூர்ணிமா அன்று திறக்கப்படும் என, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதன்படி, நேற்று மகா சமாதி நேற்று திறக்கப்பட்டது. வெள்ளை பளிங்கு கற்களால் அமைக்கப்பட்ட சமாதி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாய் குல்வந்த் ஹாலில் திரண்டு இருந்தனர். இந்நிகழ்ச்சியில், ஆந்திர மாநில அமைச்சர்கள் ரகுவீராரெட்டி, கீதா ரெட்டி, ஆகியோர் பங்கேற்றனர். புட்டபர்த்தி நகரமே, விழாக் கோலம் பூண்டு இருந்தது. புட்டபர்த்தி முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.