பதிவு செய்த நாள்
07
ஆக
2015
11:08
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடி அஸ்வினியில் துவங்கிய ஆடிக் கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து, மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று, ஆடி அஸ்வினியில் துவங்கியது.இதையடுத்து, அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு பால், பன்னீர், தேன், விபூதி மற்றும் பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், தங்க கீரிடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்களை மூலவருக்கு அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்தார். அங்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. விழாவின் முதல் நாளான நேற்று, ஆயிரக் கணக்கான பக்தர்கள் மலைக் கோவிலுக்கு காவடிகள் எடுத்து வந்து வழிபட்டனர். இந்த விழாவையொட்டி, தமிழகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள், திருத்தணிக்கு இயக்கப்பட்டு உள்ளன. மேலும், அரக்கோணம் திருத்தணி இடையே, சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு உள்ளன. திருத்தணியில், 1,300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.