பதிவு செய்த நாள்
16
ஜூலை
2011
11:07
ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி சாலை இசக்கியம்மன் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.ஆழ்வார்குறிச்சியில் அம்பாசமுத்திரம் - தென்காசி மெயின்ரோட்டில் மிகவும் சிறப்பு பெற்ற சாலை இசக்கியம்மன் கோயில் உள்ளது. கடந்த வாரம் கால்நாட்டுதல் வைபவத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 13ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மகா அனுக்ஞை, புண்யாவாசனம், கணபதி ஹோமம், தீபாராதனை, கோ பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது.நேற்று முன்தினம் காலை 2ம் கால யாகசாலை பூஜையும், மாலை 3ம் கால யாகசாலை பூஜையும், மூலமந்திர ஜெபமும், இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம், பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம் ஆகியன நடந்தது. நேற்று காலை 10 மணியளவில் செண்டை மேளம் முழங்க கடம் புறப்பட்டு சாலை இசக்கியம்மன் மற்றும் சமேத பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. பரம்பரை அர்ச்சகர் ஆர்.நெல்லையப்பன் முன்னிலையில் ஆழ்வார்குறிச்சி சக்தி சுப்பிரமணியபட்டர் குழுவினர் கும்பாபிஷேகத்தினை நடத்தினர். அதனை தொடர்ந்து மகா அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, மகேஸ்வர பூஜையும், திருமலையப்பபுரம் ஹரிஹரன் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.விழாவில் அம்பை எம்எல்ஏ இசக்கி சுப்பையா, கடையம் கைலாசநாதர் பக்த பேரவை தலைவர் நல்லாசிரியர் மீனாட்சிசுந்தரம், கோமதி கல்யாணி, ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் எஸ்.வி.முருகேஷ், அம்பை தாலுகா வாணியர் சமுதாய தலைவர் சுப்பிரமணியன், முருகன் ஸ்டோர்ஸ் முருகன், தேமுதிக நகர இளைஞரணி துணை செயலாளர் அத்ரி ஆறுமுகம், ஆலங்குளம் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., பிரதிநிதி மாரியப்பன், சக்தி, ஆழ்வார்குறிச்சி அதிமுக நகர செயலாளர் சங்கர், சாலை இசக்கியம்மன் கோயில் கோமரத்தார்கள் இசக்கிமுத்து யாதவ், சத்யா சண்முகம், சூரியகுமார் யாதவ், திருமலையப்பபுரம் ஹரிஹரன், கடையம் இசக்கிமுத்து, நகர ஆட்டோ, கார், வேன் சங்க தலைவர் சுமன் செல்லத்துரை, பரமகல்யாணி கல்லூரி அக்கவுண்டன்ட் பிச்சப்பா உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.குலவை ஒலி முழங்க கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் சாரல் மழை பெய்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர். மாலை 6 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, விசேஷ தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை அர்ச்சகர் நெல்லையப்பன் மேற்பார்வையில் கும்பாபிஷேக கமிட்டியினர் செய்திருந்தனர்.