பதிவு செய்த நாள்
18
ஜூலை
2011
10:07
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில் நேற்று, புதுமணத் தம்பதிகள் குவிந்தனர். ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில், ஆண்டுதோறும் ஆடி பிறப்பன்று, புதுமணப்பெண்ணுக்கு, புது மஞ்சள் கயிறு கட்டுவதால், மாங்கல்ய பலம் அதிகரிக்கும். குடும்பம் சுபிட்சம் பெறும் என்பது நம்பிக்கை. மூன்று நதிகள் சங்கமிக்கும் கூடுறையில் குளித்து, கன்னிமார் பூஜைகள் செய்வது, புதுமணத் தம்பதிகளுக்கு விசேஷமானது. இதனால், அதிகாலை முதலே புதுமணத் தம்பதிகள், கூடுதுறையில் புனித நீராடி, சங்கமேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று ஆடிப்பிறப்பு என்பதால், வழக்கம் போல் அதிகாலை முதல் கூடுதுறையில், பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. கூடுதுறையில் புனித நீராடி, மஞ்சள் கயிறு கட்டி, திருமணத்தின் போது பயன்படுத்திய மாலைகளை, ஆற்றில் விட்டு வழிபட்டனர். பக்தர்களின் கூட்டம் அதிகமானதால், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூடுதுறையில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், "படித்துறையை கடந்து பக்தர்கள் குளிக்கச் செல்ல வேண்டாம் என்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.