குன்றத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க ரோப் கார் திட்டத்திற்கு பதில் மலைத்தோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2015 11:08
மதுரை: மதுரை வரும் சுற்றுலா பயணிகளை திருப்பரங்குன்றத்திற்கும் வரவழைக்க அங்குள்ள மலைப்பகுதியில் தோட்டம் அமைக்க பரிசீலிக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலையில் ரோப் கார் அமைப்பதற்கான ஆய்வு சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. ரோப் கார் பயணத்தின் போது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சைட் சீன்ஸ் இங்கு இல்லாததால் இத்திட்டம் கைவிடப்பட்டது.தற்போது உள்ள மலைப்பாதையை ஒட்டிய பகுதி வழியாக காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப் கார் இயக்கம் குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. இத்திட்டமும் கைவிடப்பட்டது. இதற்கு மாற்றாக, இங்குள்ள மலையில் மலைத்தோட்டம் அமைத்து அழகுபடுத்தும் வாய்ப்புகள் குறித்து அப்போது ஆராயப்பட்டது. ஆனால் மலையடிவாரத்தில் எக்கோ பார்க் அமைக்கப்பட்டு நீரூற்று நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மலை அருகில் விமான நிலையம் உள்ளதால், இந்த மலையில் தோட்டங்கள் அமைத்து இரவிலும் மின்ஒளியில் ஜொலிக்க கூடிய வசதிகளை ஏற்படுத்தினால், விமானத்தில் இருந்தும் இந்த மலைக்காட்சிகளை வியந்து ரசிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், வெளிநாடுகளில் இது போல் இருப்பதாகவும் சுற்றுலா ஆர்வலர்கள் அரசுக்கு தெரிவித்தனர்.தொல்லியல் துறையின் பராமரிப்பில் சில பகுதிகள் இம்மலையில் இருந்தாலும், அறநிலையத்துறையின் முழு கட்டுப்பாட்டில் மலை உள்ளது. தொல்லியல் துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தலாம்.அதிகாரிகள் கூறுகையில், திருப்பரங்குன்றத்தில் இயற்கையை மேம்படுத்தும் வகையில் நந்தவனம், பூங்கா, சரவணப்பொய்கை என பல பகுதிகள் உள்ளன. மலை மீது தோட்டம் அமைப்பது சவாலானதாகவும், புதுமையாகவும் இருக்கும். தமிழகத்தில் இது ஒரு புது முயற்சியாகவும் இருக்கும். இத்திட்டம் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றனர்.