பதிவு செய்த நாள்
17
ஆக
2015
12:08
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடந்த, ஆடிப்பூர விழாவில், ஆதிபராசக்தி அம்மனுக்கு, மூன்று லட்சம் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்தனர். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆடிப்பூர விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம், கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான, 44வது ஆடிப்பூர விழாவை, காலை 11:00 மணிக்கு, பங்காரு அடிகளார், பாலபிஷேகம் செய்து துவக்கி வைத்தார். விழாவிற்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை தாங்கினார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ஆதிபராசக்தி விளையாட்டு திடலிலிருந்து, 6 கி.மீ., துாரத்திற்கு பக்தர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நீண்டவரி சையில் வந்து, அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர். இது, இரவு 7:00 மணிக்கு நிறைவடைந்தது. பின், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரண்டு நாள் பாலபிஷேக விழாவில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வணங்கினர். கஞ்சி வினியோகிப்பதை, காஞ்சிபுரம், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, நீலகிரி மாவட்ட பக்தர்கள் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்களைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரஸ்வதி ஆகியோர் செய்திருந்தனர்.