பதிவு செய்த நாள்
18
ஆக
2015
11:08
ராமேஸ்வரம்: ஆடித்திருக்கல்யாண விழாவையொட்டி, ராமேஸ்வரம் கோயில் தபசு மண்டபத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. ஆடித் திருக்கல்யாணம் விழா ராமேஸ்வரம் கோயிலில் ஆக., 7 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக., 14 ல் ஆடி அமாவாசை சிறப்பு பூஜையும், மறுநாள் ஆடி தேரோட்டமும் நடந்தது. விழாவின் 11வது நாள் ஆடி தபசு விழாவாக நேற்றுகாலை 7 மணிக்கு, கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் கமல வாகனத்திலும், மதியம் 12.30 மணிக்கு ராமநாத சுவாமி தங்க காளை வாகனத்திலும் புறப்பாடாகி, தபசு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு கோயில் குருக்கள் ரவி பர்வே, விஜயகுமார் வேதமந்திரங்கள் முழங்க சுவாமி, அம்மனுக்கு 3 முறை மாலை மாற்றுதல், மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. மாலை 5 மணிக்கு சுவாமி, அம்மன் புறப்பாடாகி கோயிலுக்கு திரும்பியதும் நடைதிறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.