பதிவு செய்த நாள்
18
ஆக
2015
11:08
மாமல்லபுரம்: கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவிலில், நேற்று முன்தினம், ஆடிப்பூர தீமிதி விழா நடந்தது. மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தில், இந்து சமய அறநிலைய துறை, நெம்மேலி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளையின் கீழ், மாரி சின்னம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த, 14ம் தேதி மாலை, அம்மனுக்கு காப்பு கட்டி, ஆடிப்பூர உற்சவம் துவங்கியது. மறுநாள் காலை, சக்தி கரக வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பகலில் பெரியம்மன், சின்னம்மன், விநாயகர், பிடாரி அசலி அம்மன் ஆகியோருக்கு, 208 குட பாலில் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை, திருக்குள கங்கைநீருடன் சென்று, அம்மன் சன்னிதியில் அலகு நிறுத்தப்பட்டது.அதை தொடர்ந்து மாலை, கோவில் அர்ச்சகர் திருக்குளத்திலிருந்து பூங்கரகத்துடன் சென்று தீ மிதிக்க, அவரை தொடர்ந்து, 619 பேர் தீ மிதித்தனர். இரவு, உற்சவ மூர்த்தி வீதியுலாவும், நாடகமும் நடந்தன.