பதிவு செய்த நாள்
18
ஆக
2015
12:08
நாமக்கல்: மகா மாரியம்மன் கோவிலில், வரும், 23ம் தேதி தேர்திருவிழா கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் அடுத்த, என்.கொசவம்பட்டி கவரா நகரில், மகா மாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் தேர்திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, நேற்று முன்தினம், மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, மதியம், புண்ணியாசானம், பிடாரி அம்மன் கோவிலில், பொங்கல் வைத்து ஸ்வாமிக்கு படையல் வைக்கப்பட்டது. அதையடுத்து, கம்பம் நட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று துவங்கி, 22ம் தேதி வரை தினமும், இரவு, 7 மணிக்கு கிராம பூஜை நடக்கிறது. வரும், 23ம் தேதி, காலை, 7 மணிக்கு திருத்தேர் பூட்டுதல், மாலை, 3 மணிக்கு திருத்தேரில் கலசம் வைத்தல், இரவு, 7.30 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 24ம் தேதி அதிகாலை, 1 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை, 4 மணிக்கு, பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இரவு, 8 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. 25ம் தேதி, காலை, 9 மணிக்கு, திருத்தேர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். காலை, 9 மணிக்கு கிடாவெட்டும், மாலை, 6 மணிக்கு, கம்பம் பிடுங்கி ஸ்வாமி கிணற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.