பதிவு செய்த நாள்
18
ஆக
2015
12:08
நாமக்கல்: தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில், ஷீரடி சாய்பாபா கோவிலில், ஆகஸ்ட், 20ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. நாமக்கல்-பரமத்தி சாலை, தொட்டிப்பட்டியில் சாய் தபோவனத்தில், ஷீரடி சாய்பாபா திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மிகுந்து பொருட்செலவில் கோவில் திருப்பணி துவங்கியது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. வரும், 20ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் சின்மயா மிஷன் ஆச்சார்யா அநுத்தமாநந்தா ஸ்வாமிகள் மற்றும் நாமக்கல் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் தலைவர் பூரணசேவாநந்த மஹராஜ் ஸ்வாமிகள் ஆகியோர் முன்னிலையில் விழா கோலாகலமாக நடக்கிறது. விழாவை முன்னிட்டு, இன்று (ஆக., 18) காலை, 5.30 மணிக்கு, முதல்கால பூஜை துவங்குகிறது. தொடர்ந்து குரு பிரார்த்தனை, மகா கணபதி பூஜை, மகா யாகம், அக்னி உருவெடுத்தல், புண்யாகம், மூர்த்தம் ஆவாகணம், ஜபம், பூர்ணாஹூதி ஹோமம், நித்ய ஆராதனை நடக்கிறது. மாலை, 4 மணிக்கு, இரண்டாம் கால பூஜை நடக்கிறது. நாளை (ஆக., 19) காலை, 8. 30 மணிக்கு, புண்யாகம், நித்திய ஹோமம், மகா சாந்தி ஹோமம், நித்ய ஆராதனையும், மாலை, 4.30 மணிக்கு, மகா சாந்தி அபிஷேகம், விமான நேத்திரம் திறத்தல், மூர்த்தம் நேத்ரம் திறத்தல், தீபாராதனையும் நடக்கிறது. ஆகஸ்ட், 20ம் தேதி, அதிகாலை, 5.45 மணிக்கு, ஐந்தாம் கால பூஜையும், கும்பம் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதையடுத்து, காலை, 9 மணிக்கு, கற்பக விநாயகர், யோக ஆஞ்சநேயர் மற்றும் சர்வசித்தி சாயி ஸ்வாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், ஷீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் செய்துள்ளனர்.