பதிவு செய்த நாள்
19
ஜூலை
2011
11:07
தமிழகத்தில் செவ்வாய் கிழமையில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை, பொருட்கள் வாங்குவதில்லை என்று வழக்கம் இருக்கிறது. உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார் என்று குறிப்பிடுவர். அந்நாளில், வடமாநிலங்களில் மங்கல நிகழ்ச்சி நடத்த தயங்குவதில்லை. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். கல்வியறிவு மிக்க இந்த மாநிலத்தில் செவ்வாய் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடியை சூன்ய மாதம் என்பர். ஆனால், தள்ளுபடி விற்பனையோ அமோகமாக நடக்கிறது.
நிலம் வழங்கும் கிரகம்: பெருமாளின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை ஒதுக்குவது பூமித்தாயைப் புறக்கணிப்பதாகும். இந்நாளில் மங்கலப்பொருட்களை வாங்குவதும், சுபநிகழ்ச்சி நடத்துவதும் நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு செலுத்தும் நன்றிக்கடனாகும். பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடுவது நன்மை தரும். பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம் தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அங்காரகன் ஆச்ரயாமி என்று செவ்வாயைப் போற்றுகிறார். நலத்தைத் தருபவனே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! எளியவர்களைக் காப்பவனே! என்று பாடுகிறார். செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.ஜாதகத்தில், செவ்வாயின் பலத்தை பொறுத்தே நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும். ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ளது. செவ்வாயை வழிபட்டால் ரத்தஅழுத்தம், உஷ்ணம், கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
கிழமை ஒரு தடையல்ல:அட்சயதிரிதியை, ஆடிப்பெருக்கு நாட்களில் மக்கள் பொன், பொருளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். 1988 ஏப்ரல்19, 1992 மே5, 1995 மே2ல், அட்சயதிரிதியை செவ்வாயன்று வந்தது. 2010 ஆகஸ்ட்3ல் ஆடிப்பெருக்கு செவ்வாயில்அமைந்தது. இந்த நாட்களில் பொன், பொருள் வாங்கியவர்கள், கிழமையை மனதில் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், செவ்வாயன்று பொருள் வாங்கும் சிலர் வழக்கத்தை விட அதிக பலனே பெறுகின்றனர்.