பதிவு செய்த நாள்
19
ஜூலை
2011
11:07
சென்னை:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும், "ஆடி மாத ஆன்மிக சுற்றுலா நேற்று துவங்கியது.ஆடி மாதம், அம்மனுக்கு விசேஷமானது. இம்மாதம், அனைத்து அம்மன் கோவில்களிலும், திருவிழாக்கள் நடைபெறும். ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட விரும்புவோருக்காக, ஐந்து ஆண்டுகளாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், "ஆடி மாத ஆன்மிக சுற்றுலா நடத்தப்படுகிறது. இச்சுற்றுலாவில் பங்கேற்கும் பயணிகள், சென்னை, வண்டலூர், பொத்தேரி, செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மாயவரம், செம்பனார்கோவில், மேலையூர், திருக்கடையூர், ஒழுகைமங்கலம், காரைக்கால். நாகப்பட்டினம், பொரவச்சேரி, சிக்கல், கீழ்வேளூர், அடியக்கமங்கலம், திருவாரூர், காட்டூர், புன்னைநல்லூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கானாடுகாத்தான், காரைக்குடி, கோவிலூர், திருப்பத்தூர். மதுரை, திருப்பரங்குன்றம், உறையூர், திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், கூத்தூர், சமயபுரம், திருபட்டூர், சிறுவாச்சூர், விழுப்புரம், திருவக்கரை, மேல்மருவத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள, 108 அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுவர்.இவ்வருடத்திற்கான ஆடி மாத ஆன்மிக சுற்றுலா, நேற்று துவங்கியது. முதல் பயணமாக, 51 பேர் புறப்பட்டனர். தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேலாண் இயக்குனர் மோகன்தாஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.இச்சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர், திங்கள் மற்றும் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு, சென்னையிலிருந்து அழைத்து செல்லப்படுகின்றனர். திங்கட்கிழமை புறப்படுவோர் வெள்ளிக்கிழமையும், வியாழக்கிழமை புறப்படுவோர் திங்கட்கிழமையும் சென்னை திரும்புவர்.சுற்றுலா கட்டணமாக பெரியவர்களுக்கு, 3,250 ரூபாய், நான்கு வயது முதல் 10 வயது வரை உள்ளவர்களுக்கு கட்டணமாக, 2,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணத்தில், போக்குவரத்து, தங்கும் வசதி, வழிகாட்டியினர் சேவை அடங்கும். உணவிற்கான செலவை சுற்றுலாப் பயணிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெண்கள் ஆர்வம்: ஆடி மாத ஆன்மிக சுற்றுலாவிற்கு பெண்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. நேற்று, 3 வாகனங்களில், 51 பேர், 108 அம்மன் கோவில்களை தரிசிக்க புறப்பட்டனர்; இவர்களில் 49 பேர் பெண்கள்.அடுத்து, 5 வாரங்களுக்கு தலா, 17 பெண்கள், முன்பதிவு செய்துள்ளனர். நேற்று சுற்றுலா சென்றவர்கள் மூலம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு, ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 750 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல், சென்னையில் உள்ள அம்மன் கோவில்களை மட்டும் ஒரு நாள் தரிசிக்க, சக்தி சுற்றுலா நடத்தப்படுகிறது.