பழவூர் கோயில் சிலைகளை திருப்பணி குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2011 11:07
பணகுடி : பழவூர் நாறும்பூநாத சுவாமி கோயிலில் 6 ஆண்டுகளுக்கு முன் 13 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது மீட்கப்பட்டுள்ள 9 சிலைகளை கோயில் திருப்பணிக்குழுவிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.பழவூர் நாறும்பூநாத சுவாமி கோயில் பாண்டிய மன்னர்களின் வாரிசான வீரமார்த்தாண்ட மன்னரால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1998ம் ஆண்டு உள் பிரகார சுற்றுச்சுவர் முற்றிலும் சேதமடைந்த நிலையில் அதனை சீரமைக்க வலியுறுத்திய காலகட்டத்தில் 2006ம் ஆண்டு திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. அதன்பேரில் அரசு மானியமாக ரூ.3 லட்சமும், பொதுநல நிதியாக ரூ.4 லட்சமும், பொதுமக்கள் நன்கொடையாக 3 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயும் என்ற அளவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் அப்போதைய எம்.எல்.ஏ.,அப்பாவு அவரது தொகுதி நிதி வாயிலாக கலையரங்கத்திற்கு 2 லட்சம் ரூபாயும், தெப்பக்குளம் பைப்-லைன் பணிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வழங்கிய நிலையில் பணிகள் முழுமையடைந்துள்ளன. அத்துடன் உபயதாரர்கள் வழங்கிய நிதியுடன் சேர்த்து கிட்டத்தட்ட 17 லட்சம் ரூபாயில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி பழவூர் கோயிலில் 13 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அதில் 9 சிலைகள் 2006ம் ஆண்டு செப்.14ம் தேதி ஹாங்காங் நாட்டிற்கு கடத்த முயன்றபோது பிடிபட்டது. மீதமுள்ள 4 சிலைகள் குறித்த விபரம் கண்டறியப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் மூலஸ்தானத்திற்கான ஆனந்த நடராஜர் சிலையும் அடங்கும்.கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிலைகளை பழவூர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க திருப்பணிக்குழு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து, அங்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோயில் திருப்பணிக்குழு தலைவர் அனவரதம் பிள்ளை மதுரை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.அதனடிப்படையில் கோயிலின் முக்கிய சிலையான ஆனந்த நடராஜர் சிலை உட்பட 9 சிலைகளை கோயில் திருப்பணிக்குழுவிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிக்குழு மற்றும் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.