பதிவு செய்த நாள்
22
ஆக
2015
12:08
ப.வேலூர்: திருவிழா, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பூக்கள் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. பரமத்தி, ப.வேலூர், பாண்டமங்கலம், கபிலர்மலை, பொத்தனூர், ஜேடர்பாளையம் மற்றும் கரூர் மாவட்டம் சேமங்கி ஆகிய பகுதிகளில், மல்லிகை, சம்பங்கி, அரளி ஆகிய பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூக்கள், ப.வேலூரில் உள்ள தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு, ஏலம் விடப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் பூக்களை சுற்று வட்டாரத்தை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டி ஏலம் எடுத்துச் செல்வது வழக்கம். விசேஷ நாட்களில் பூக்கள் விலை உச்சத்தை அடைவதும், மற்ற காலங்களில் விலை சரிவு ஏற்படுவதும் இயல்பு. கடந்த மாதம் ஆடி மாதம் அம்மனுக்கு விசேஷ பூஜைகள், அலங்காரம் செய்ததால், பூக்களில் விலை கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமை பூக்கள் விலை உச்சத்தை தொட்டது. தற்போது, திருவிழா, கும்பாபிஷேக விழா என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதை தொடர்ந்து, பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரம், 180க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டு மல்லிகை, நேற்று, மூன்று மடங்கு உயர்ந்து, கிலோ, 500 ரூபாய்க்கு ஏலம்போனது. அதேபோல், கிலோ, 180க்கு ஏலம் போன, முல்லைப்பூ, நேற்று கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும், கிலோ, 200க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்களி, 400 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு ஏலம் போன, செண்டுமல்லி, 300 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட, அரளி பூ, ஒரு கட்டு, 100 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த விலை உயர்வு பயிரிட்ட விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.