பதிவு செய்த நாள்
19
ஜூலை
2011
11:07
கும்பகோணம்: ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினர், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 58வது உழவாரப்பணியை மேற்கொண்டனர். கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினர் ஒவ்வொரு மாதமும் சிவனடியார்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் மூலம் சிவத்தலங்களில் உழவாரப்பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மாதத்தின் மூன்றாவது ஞாயிறன்று கும்பகோணத்தை அடுத்த துக்காச்சியில் உள்ள சௌந்தரநாயகி அம்பாள் உடனாகிய ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டனர். விக்ரம சோழமன்னரால் கட்டப்பட்டதும், தாராசுரம் ஐராவதீஸ்வரசுவாமி கோவிலின் தோற்றம் கொண்டதும், கும்பகோணம் வட்டத்திலுள்ள மூன்று சரபேஸ்வர சன்னதிகளில் முதலாவதானதும், துர்க்கை தெற்கு நோக்கி தனி சன்னதி கொண்ட சிறப்பு மிக்கதுமான துர்க்கை ஆட்சி எனும் துக்காச்சி சிவாலயம் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. ஏழு பிரகாரங்களை கொண்ட இக்கோவிலில் இன்று மூன்று பிரகாரங்களே உள்ளது. சிற்பக்கலை வேலைப்பாடுகளுடன் கூடிய இக்கோவிலில் நேற்று காலை 7 மணிக்கு உழவாரப்பணியை துவக்கினர். சென்னையிலிருந்து டாக்டர் விசுவநாதன் தலைமையில் 15 அடியார்கள், கும்பகோணம் மற்றும் துக்காச்சி பகுதி பக்தர்கள், சைவ சமய வகுப்பு மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு செய்தனர். இரண்டாவது சிறிய ராஜகோபுரம், சுவாமி, அம்பாள் விமானம், மண்டபங்கள், திருமாளிகைப்பத்தி, மதில்சுவர் செடி, கொடி, மரங்கள் அகற்றப்பட்டன. பிரகார பாதைகள் சுத்தம் செய்யப்பட்டது. நடைபாதையில் இருந்த புல், பூண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டது. சிவனடியார்கள், அர்ச்சகர், கிராமவாசிகள் அமர்ந்து பேசியதில், இக்கோவிலில் ஆவணி மாதம் பாலாலயம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பணிக்கான உபயதாரர்களை அணுகுவது என முடிவு செய்யப்பட்டது.