திருவள்ளூர் : புட்லூர் அங்காளம்மன் கோவிலில், ஆடித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில், பிரசித்தி பெற்றது புட்லூர் ராமாபுரம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். ஆடி மாத திருவிழா இங்கு விசேஷமானது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து, அம்மனை தரிசனம் செய்வர். நேற்று முன்தினம் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து குவிந்தனர். பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், வேப்ப இலை யை உடலில் சுற்றிக் கொண்டு, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். அதிகளவில் இங்கு கூடிய பக்தர்கள், சாலையில் வாகன நெரிசலில் சிக்கித் தவித்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.