பதிவு செய்த நாள்
29
ஆக
2015
12:08
மூணாறு: கேரளாவில் மலையாள மக்கள் மகாபலி மன்னனை வரவேற்கும் வகையிலும், அறுவடை திருநாளாகவும் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். நேற்று ஓணம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. வீடுகள் தோறும் வாசலில் "அத்தப் பூ கோலமிட்டு, பாரம்பரிய புத்தாடை அணிந்து, கலை நிகழ்ச்சிகளை நடத்தி, ஊஞ்சலில் அமர்ந்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமான "ஓண சத்யா எனும் விருந்து, அறு சுவைகளில், கசப்பு தவிர ஐந்து சுவைகளில் வித, விதமாக சமைப்பது வழக்கம். இந்த விருந்தின்போது, குறைந்த பட்சம் 20 வகைக்கு குறைவில்லாமல் முற்றிலும் சைவத்தில் உணவு தயார் செய்யப்படும். குறிப்பாக அரிசி சாதம்,பருப்பு,நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம்,மோர்,தோரன்,கூட்டு, கிச்சடி,பச்சடி, அவியல்,இஞ்சி கறி, இஞ்சி உள்பட பல்வேறு வகை ஊறுகாய், எரிசேரி என்ப்படும் மோர் குழம்பு, மிளகாய் அவியல், அப்பளம், சீடை, ஏத்த வாழை சிப்ஸ், சக்கரைபுரட்டி, புதிய அரிசி மாவில் தயார் செய்த அடை மற்றும் அடை பிரதமன் உள்பட பல்வேறு வகை பாயசங்கள் போன்றவை கண்டிப்பாக இடம்பெறும். இவை தலை வாழை இலையில் பரிமாறப்படும். இவற்றை உண்டு மகிழ்ந்தனர். இவ்வாறு ஜாதி, மத வேறுபாடு இன்றி மலையாள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகையை, கேரளாவில் வசிக்கும் தமிழர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். மூணாறில் முதன்முறையாக பிரணவ சுப்பிரமணி சுவாமி ஆன்மிக குழு சார்பில், கோயில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மஹாலில் "அத்தப் பூ கோலப்போட்டி நடந்தது. இதில் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் வித, விதமான பூக்களில் கோலமிட்டனர். சிறந்த பூக் கோலங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆன்மிக குழு தலைவர் மாடசாமி,பொது செயலாளர் குமார், ஆலோசகர் சூட்டுசாமி ஆகியோர் செய்திருந்தனர்.