பதிவு செய்த நாள்
29
ஆக
2015
01:08
மாதவரம்: ஆடி திருவிழாவை ஒட்டி, மாதவரம் சுயம்பு அங்காள பரமேஸ்வரி சக்தி கோவிலில் பால்குடம் ஊர்வலம், கோசாலை திறப்பு விழா நடந்தது. சென்னை மாதவரம் பகவத்சிங் நகர், புதிய பேருந்து நிலையம் பின்புறம், சுயம்பு அங்காள பரமேஸ்வரி சக்தி பீடம் கோவில் அமைந்து உள்ளது. இந்த ஆண்டு ஆடி திருவிழாவை ஒட்டி, நேற்று காலை, 108 பால்குட திருவீதி உலா, கோசாலை திறப்பு விழா நடந்தன. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் முளைப்பாரி வீதி உலாவும் அதைத்தொடர்ந்து தீச்சட்டி, அலகு ஏந்தி நேர்த்திக்கடனும் நடந்தன. இன்று (29ம் தேதி) காலை, இருமுடி திருவீதி வலம், மாலை, 6:00 மணி அளவில் குழந்தைகளை தொட்டிலில் இட்டு தீச்சட்டி எடுத்தல் ஆகியவை நடைபெறும்.நாளை (30ம் தேதி) காலை, சந்தனகுடம் ஊர்வலம், பகலில் கூழ்வார்த்தல் மற்றும் அன்னதானம், பிற்பகல் 3:30 மணி அளவில் குழந்தையை குழி மாற்றும் நேர்த்திக்கடன் நிகழ்ச்சி ஆகியவை நடக்க உள்ளன. விழா நாட்களில் பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம், மருதாணி, வளையல், அரிசி உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.