உறவினர்கள் மட்டுமின்றி, அறிமுகம் இல்லாதவர்கள் மரணமடைந்தாலும் கூட அவரது இறுதி ஊர்வல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது. மரண ஊர்வலத்தில் கலந்து கொள்வதன் மூலம்மரணித்தவரின் குடும்பத்திற்கும், கலந்து கொள்பவரின் குடும்பத்திற்கும் இடையே நேசம் உண்டாகிறது. இதன்மூலம் ஒரு புதிய உறவைஏற்படுத்திக் கொள்ளலாம். குடும்பத்தில் சண்டை வரும்போது, நீ இறந்துபோனால் கூட உன் முகத்தில் விழிக்க மாட்டேன் என கோபத்தில் சொல்வார்கள். சொன்னபடியே நடந்தும் கொள்வார்கள். இதனால், இரு குடும்பங்களுக்கும் இடையே பகைதான் வளரும். அப்படி ஏதோ கோபத்தில் சொன்னவர்கள் கூட, தன்னால் வெறுக்கப்பட்டவர் மரணமடைந்தால் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும். அப்போது இரு குடும்பத்திற்கும் இடையே உள்ள பழைய பகை மறந்து போகும். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் பாதியிலேயே திரும்பி விடக் கூடாது. உடல் அடக்கம் செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டும். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்பவருக்கு ஒரு மடங்கு நன்மையும், ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை காத்திருந்து வருபவருக்கு இரண்டு மடங்கு நன்மையும் கணக்கில் எழுதப்படும் என நபிகள் சொல்கிறார்.