பதிவு செய்த நாள்
31
ஆக
2015
11:08
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர்.திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், 70வது ஆண்டு தீமிதி திருவிழா, கடந்த 21ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை, 3:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், இரவு, 10:00 மணிக்கு நாடகமும் நடந்தது.நேற்று, காலை, 9:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை 6:30 மணிக்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர். இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, காலை 11:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.